கரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளன. இதனால், தனியார் பள்ளிகள் பலவும் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கியுள்ளன. அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு கல்வி தொலைக்காட்சிகள் மூலமும், சிலர் பள்ளிக்குச் சென்று சிறப்பு வகுப்புகளிலும் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு புவியியல் புத்தகத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய பன்னாட்டு விமான நிலையங்கள் குறித்த தகவல்கள் வேறு ஒன்றாக இடம்பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அதில், சென்னை மீனம்பாக்கத்தில் அமைந்துள்ள பன்னாட்டு விமான நிலையத்தின் பெயர் 'மீனம்பாக்கம் விமான நிலையம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரின் போதே பயன்படுத்தப்பட்ட இந்த விமான நிலையம், இந்தியாவிலுள்ள முக்கிய மற்றும் பழமையான விமான நிலையங்களில் ஒன்று. இந்த விமான நிலையத்திற்கு மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின்படி 1989ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பெயரைச் சூட்டினார், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி.
இவை நடைபெற்று பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், தற்போது சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகத்தின் 2019ஆம் ஆண்டு பதிப்பில் 'மீனம்பாக்கம் விமான நிலையம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, "சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள புவியியல் புத்தகத்தின் 2019ஆம் ஆண்டுப் பதிப்பில் தற்கால இந்தியாவிலுள்ள முக்கிய பன்னாட்டு விமான நிலையங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை பன்னாட்டு விமான நிலையம், மீனம்பாக்கம் விமான நிலையம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம். அது மீனம்பாக்கத்தில் அமைந்துள்ளது. ஆனால், அதன் பெயர் அண்ணா பன்னாட்டு முனையம். இதுதான் இந்தியாவிலுள்ள பிரச்னை. வடக்கர்கள் தென்னிந்தியா குறித்து அறிவதே இல்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.
நேற்று(நவ.01) மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக அனைத்து மாநிலங்களுக்கும் அந்தந்த மாநில மொழிகளில் வாழ்த்து தெரிவித்திருந்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் தவிர்த்தது சர்ச்சையாகியிருந்த நிலையில், தற்போது, தமிழ்நாட்டில் திராவிடக் கொள்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்திய அண்ணாவை புறக்கணிக்கும் விதமாக சிபிஎஸ்இ பாடப்புத்தகத்தில் அவரது பெயர் இடம்பெறாமல் உள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.