திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 'புதிய கல்விக் கொள்கை' பற்றிய காணொலி கருத்து மேடை நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, கல்வியாளர்கள் பலர் பங்கேற்று புதிய கல்விக் கொள்கை பற்றிய கருத்துக்களை முன்வைத்தனர்.
இதைத் தொடர்ந்து பேசிய ஸ்டாலின், “கல்வியாளர்கள் அனைவரும், இந்த புதிய கல்விக் கொள்கை மோசமானது, மக்களுக்கு விரோதமானது என்கின்றனர். இந்த கல்விக் கொள்கை மிக மோசமானதாக இருக்கும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, கருணாநிதி கண்டித்துள்ளார். கல்வியில் கை வைத்தால்தான், மொத்தத்தையும் மாற்ற முடியும் என்பதை அறிந்ததால் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாட்டை மத யானை புகுந்து நாசம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய கல்விக் கொள்கையை மொத்தமாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியாவில் உள்ள பல்வேறு அமைப்புகள், கல்வியாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் எதையும் ஏற்காமல் மத்திய அரசு, அந்தக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது.
நேற்றைய (ஆகஸ்ட் 1) தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களின் ஒளிமயமான எதிர்காலத்தை மனதில் கொண்டு இத்திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம் என்று இந்த கல்விக் கொள்கை பற்றி உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைப் பேசி இருக்கிறார். இப்போது அறிமுகம் செய்திருக்கும் திட்டத்தால் மாணவர்கள் பலரும் பாதியிலேயே பள்ளிகளை விட்டு விரட்டப்படுவார்கள் என்று பிரதமருக்கு எடுத்துக்கூற விரும்புகிறேன்.
பிரதமர் கூறுவது போல, அனைவருக்கும் கல்வி கிடைக்காது. இந்த கல்விக் கொள்கை அமலானால், இன்னும் பத்து ஆண்டுகளில் கல்வி என்பது சிலருக்கு மட்டுமே சொந்தமானதாக ஆகிவிடும். புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு நிராகரிக்க வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் பெயரை கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்டிருக்கும் அதிமுக, மும்மொழிக் கொள்கையை கொண்ட புதிய கல்விக் கொள்கையை எதிர்க்காமல் மௌனம் சாதிக்கக் கூடாது" என்றார்.