இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாநிலத்தின் நிதித் தன்னாட்சி உரிமைக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிராக மத்திய வரிகளில் தமிழ்நாட்டிற்கு வெறும் 1,928.56 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. மத்திய வரி வருவாய் தொகுப்பிற்கு தமிழ்நாடோ தென்னிந்திய மாநிலங்களோ அளிக்கும் பங்களிப்பிற்கு ஏற்றதொரு நிதிப்பகிர்வினை 15ஆவது நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை.
மாறாக, தென் மாநிலங்கள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வரி வருவாய், வடமாநிலங்களுக்குச் செல்லும் வகையிலேயே இடைக்காலப் பரிந்துரை அமைந்துவிட்டது. அந்த மிக மோசமான பாதிப்பின் எதிரொலியாகவே தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு 16.02 விழுக்காட்டின் அடிப்படையில் 7,376.73 கோடி ரூபாய்யும், உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு 41.85 விழுக்காட்டின் அடிப்படையில் 19,270.4 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநில மக்களின் உணர்வுகளை அப்பட்டமாக அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இடைக்கால அறிக்கை அளிக்கப்பட்ட பிறகும், அதிமுக ஆட்சியில் ரூ. 4.56 லட்சம் கோடிக்கு மேல் தமிழ்நாடு கடனில் மூழ்கியுள்ள உள்ள நிலையிலும் கூட, குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதற்கு நியாயம் தேடவும் முன்வரவில்லை.
அந்த அளவிற்கு முதலமைச்சருக்கு 'நாற்காலி' முக்கியமே தவிர, 'நாட்டின் நலன்' முக்கியமல்ல என்று செயல்பட்டுக் கொண்டு, மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்துள்ளனர். மாநில நிதி உரிமையை மீட்டெடுக்க, மத்திய அரசை வலியுறுத்துவதற்குத் தேவையான ஒத்துழைப்பை முதலமைச்சருக்கு வழங்க திமுக எம்.பி.,க்கள் என்றைக்கும் தயாராக இருக்கிறார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்". இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை