சென்னை: இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: " 'உத்தமபுத்திரன்' போல எடப்பாடி பழனிசாமி, இன்று வெளியிட்ட காணொலியில், முதலமைச்சர் ஸ்டாலின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போலவும், 'தான் திருடி, பிறரை நம்பாள்' என்பதைப் போலவும், பொய்யையும் புனைச்சுருட்டையும் அள்ளிவிட்டிருக்கிறார். அமலாக்கத்துறை வழக்கு குறித்து நாங்கள் எதுவும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜியை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்தே முதலமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால், பழனிசாமியோ சட்டமேதையைப் போல பேசியிருக்கிறார்.
அமலாக்கத்துறையின் 18 மணிநேர விசாரணையின்போது செய்த சித்ரவதை காரணமாகவே செந்தில் பாலாஜி உடல்நலம் பாதிக்கப்பட்டது. நெஞ்சுவலி ஏற்பட அமலாக்கத் துறையே காரணம். இதுதான் உண்மை. ஆ.இராசா கைதைக் கண்டித்து உளறிக் கொட்டியிருக்கிறார் பழனிசாமி. ஆ.இராசா கைது குறித்து தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மறைத்து பேசியிருக்கிறார்.
இல்லாத கட்டுக்கதைகளை அள்ளிவிடும் பழனிசாமி, கனிமொழி கைது செய்யப்பட்ட போது, மு.க.ஸ்டாலின் சென்று பார்க்கவில்லையே என்கிறார். 2011 சூன் மாதம் 27ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு கனிமொழியை திகார் சிறைக்கு நேரில் சென்று ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, டி.ஆர்.பாலு, ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் உடன் சென்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர், ஆ.ராசாவையும் சந்தித்தார்.கனிமொழியும், ஆ.ராசாவும் டெல்லியில் கைது செய்யப்பட்டார்கள். ஆனால், செந்தில் பாலாஜியின் கைது சென்னையில் நடந்துள்ளது
எடப்பாடிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?
ஊழலைப் பற்றிப் பேச பழனிசாமிக்கு அருகதை இல்லை. 4000 கோடி ரூபாய் டெண்டர்களை உறவினர்களுக்குக் கொடுத்தவர் பழனிசாமி. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்றம் ஓடிப் போய் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கூடாது, முதலமைச்சராக இருந்து தன்னுடைய கட்டுப்பாட்டில் இருந்த மாநில காவல் துறையே விசாரிக்க வேண்டும் என தடையாணை வாங்கினார் பழனிசாமி. இந்த வழக்கு, சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பழனிசாமி கேட்டுக் கொண்டபடியே, மாநில காவல்துறை விசாரிக்கலாம் என்ற அவரது கோரிக்கைக்கு ஆட்சேபணை இல்லை என்ற நிலையில்தான் அந்த வழக்கை திரும்ப பெற்றேன். பழனிசாமி இதனைகூட அறியாமல் பேசியிருக்கிறார்.
வழக்கை தில், திராணியுடன் சந்திப்பதாக சொல்கிறார் பழனிசாமி, அப்படி தில், திராணி இருந்தால் உச்ச நீதிமன்றம் போய் தடை வாங்கினார் இந்த எடப்பாடி பழனிசாமி?. முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி பணம் கொடுத்ததாகச் சொல்கிறார் பழனிசாமி. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். நான்கு ஆண்டு சிறைத் தண்டனை பெற்றவர் ஜெயலலிதா. நூறு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது என்று சவால் விடுகிறார் பழனிசாமி. ஆமாம், யாராலும் அழிக்க முடியாது என்று சொல்லிவிட்டு பழனிசாமியே அதிமுகவை அழித்துவிடுவார்.
துணிவு, நேர்மை இவையெல்லாம் என்னவென்றே தெரியாத பழனிசாமி எங்கள் தலைவர் பதற்றத்தில் இருப்பதாக அந்த காணொலியில் கூறியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. தன் ஆட்சிக் காலம் முழுவதும் பதற்றத்திலேயே இருந்து இப்போது இந்தத் தற்காலிகத் தலைமைப் பதவிக்காகப் பதட்டத்துடனேயே பணிந்து, குனிந்து, வளைந்து இருப்பவர்தான் இந்த பழனிசாமி என்பதை நாட்டுமக்கள் எல்லோரும் அறிவார்கள்.
அவர் ஆட்சிக்கு மீண்டும் வரவும் - இப்போது கட்சியை நடத்தவும் இந்த பம்மாத்து பழனிசாமி எப்படியெல்லாம் பணிந்து கிடக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் ஏதோ உத்தமர் போல இன்றொரு கருத்து வெளியிட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை எடுத்திருக்கும் நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ளவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிடவும் தயாராகவே இருந்தார் செந்தில் பாலாஜி. ஆனால் சோதனை என்ற பெயரில் அவர் வீட்டில் அமலாக்கத்துறை நடந்துகொண்டதும், அவர் கையாளப்பட்ட முறை எப்படி என்பதையும் நாம் சொல்ல வேண்டியதில்லை தொலைகாட்சி உள்ளிட்ட ஊடகங்களில் மக்களே அதைப் பார்த்துள்ளனர்.
"இதுபோன்ற பூச்சாண்டிகள், ரெய்டு, மிசா உள்ளிட்ட அனைத்தையும் சந்தித்த இயக்கம் திமுக. எனவே இந்த இயக்கம் எப்போதும் அவருக்கு துணை நிற்கும்" என்பதை எடுத்துக் கூறவே முதலமைச்சர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியை சந்தித்தார். ஆனால் அந்தச் சந்திப்பிற்குக் காரணமாக கற்பனைக் கதைகளையெல்லாம் அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.இந்த நடவடிக்கைளால் திமுகவிற்கு எந்த சிக்கலும் வரப்போவதில்லை ஏனென்றால் எங்களுக்கு ‘மடியில் கனமில்லை வழியில் பயமில்லை எனும் அளவிற்கும் ‘மிஸ்டர் கிளீன்’ என்ற பெயரெடுத்தவர் தான் எங்களது முதலமைச்சர்" இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வரை திடீரென சந்தித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்.. பின்னணி என்ன?