சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் விதிமீறல்களில் திமுகவினர் ஈடுபடுவதாகவும் அது குறித்த ஆவணங்களை, தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் தினமும் திமுகவினர் தேர்தல் விதி மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டினார். அந்த தொகுதிகளில் 30 அமைச்சர்கள் முகாமிட்டு அவர்கள் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. வாக்கு சேகரிக்கிறேன் என்ற பெயரில் ஒட்டகம் மீது அமர்ந்து செல்வது, டீ மற்றும் பஜ்ஜி, வடை போட்டு கொடுத்து அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் கோமாளித்தனத்தின் உச்சகட்டமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் நாட்களில் மக்கள் கூட்டம் கூடுவதைத் தடுக்க பந்தல் அமைத்து அவர்களுக்கு காலை மற்றும் மாலை 500 ரூபாய் என ஒருநாளைக்கு 1000 ரூபாயும், வீடுகளுக்கு காய்கறி, இறைச்சி தினமும் வழங்கி வருவதாக குற்றம்சாட்டினார். எனினும் மக்கள் இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து சவுக்கடி கொடுப்பார்கள் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் சுமார் 35 கோடி ரூபாய் வரை செலவு செய்வதாகவும், அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். 40,000 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், திருமங்கலம் ஃபார்முலா போன்று புதிய பார்முலாவை திமுக கடைபிடிப்பதாகவும், அந்த தொகுதிக்கு பண விநியோகம் சீராக செல்வதற்காக அதற்கு அருகே உள்ள மாவட்டங்களில் முதலமைச்சர் முகாமிட்டு ஆய்வு செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள நிலையில் வேங்கைவயல் பகுதிக்கு முதலமைச்சர் செல்லாதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். திமுகவினர் அனைவரும் காரில் கட்சிக் கொடி கட்டி வலம் வந்து, பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்; இது சட்டப்படி விதி மீறலாகும்; தேர்தல் ஆணையம் இதில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் ஜெயக்குமார்.
’காங்கிரஸ் கட்சி இயேசு கிறிஸ்துவின் படத்தை போட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட கடவுளை தேர்தல் பிரசார துண்டுகளில் விளம்பரமாக பயன்படுத்தக்கூடாது என்ற விதியை மீறி திமுக கூட்டணியினர் செயல்பட்டு வருகின்றனர்.
தேர்தல் நேர்மையாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம்’ என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலையின் நடுவில் நின்ற ராட்சத லாரி.. சென்னை - பெங்களூரு இடையே போக்குவரத்து பாதிப்பு!