சென்னை: எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுக- காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இன்று இரண்டாம் கட்டமாக தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி, கே.ஆர். ராமசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கே.எஸ். அழகிரி, "ஓரிரு நாள்களில் தொகுதிப் பங்கீடு நிறைவடையும். காங்கிரஸ் கட்சியின் பலம் குறையவில்லை, கடந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்பது இடங்களில் வெற்றிபெற்றோம்.
எங்களுக்குத் தேவையான தொகுதிகளை உம்மன் சாண்டி வருகையின்போதே கேட்டுள்ளோம், இன்றையப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும். நாளை பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை. மேலிடப் பொறுப்பாளர்கள் வரும் திட்டமும் இல்லை" என்றார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை ஆதரித்து பரப்புரை செய்யவில்லை, அவரை முதலமைச்சர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே நாங்கள் அறிவித்துவிட்டோம் எனப் பதிலளித்தார்.
கடந்த முறை ஒன்பது மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்றதைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் கட்சி சுமார் 18 தொகுதிகளுக்கு மேல் கேட்பதாகவும், அதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்: கே.எஸ். அழகிரி