சென்னை ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்ககத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தொ.மு.ச. மாநிலப் பொதுச் செயலாளர் பூச்சி முருகன், மூத்த வழக்கறிஞர்கள் புகழ் காந்தி மற்றும் முத்துக்குமரன் ஆகியோருடன் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், ’சென்னை நந்தனம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் மற்றும் அதனருகேயுள்ள தந்தை பெரியார் மாளிகை ஆகியவற்றை இடித்து பாலத்துடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக கோரப்பட்ட டெண்டரில், முறைகேடு நடந்துள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கோர பத்திரிகைகளில் ஜனவரி 12ஆம் தேதி விளம்பரம் வெளியிடப்பட்டிருந்த நிலையில், அடுத்த நாளான 13ஆம் தேதி தான் கட்டடங்களை இடிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்புகளிலிருந்தே டெண்டர் ஒதுக்குவதில் நடந்த முறைகேடு அம்பலமாகி உள்ளது.
டெண்டர் விடுவது பற்றி, இணையத்தில் அறிவிப்பு வெளிவரவில்லை. தேர்தல் நெருங்கும் வேளையில் அவசர அவசரமாக விடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்பு, குறிப்பிட்ட சிலரின் ஆதாயத்துக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஊழல் குறித்து உடனடியாக ஊழல் தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என பூச்சி முருகன் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:சட்டவிரோதமாக சிறுநீரகத்தை மாற்றும் அரசு அலுவலர்?