சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்து பேசினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழ்நாடு ஆளுநரின் அழைப்பை ஏற்று அவரைச் சென்று சந்தித்தோம். இச்சந்திப்பின்போது, வருகின்ற 20ஆம் தேதி திமுக சார்பில் நடக்க உள்ள கண்டன ஆர்ப்பாட்டம் பற்றி பேசினார். நாங்கள் எந்த காரணத்திற்காக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை விளக்கினோம்.
அதற்கு அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், எந்த காரணத்திற்காகவும் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படாது எனவும் ஆளுநர் தெரிவித்தார். இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க முன்வருமா என்று நாங்கள் கேட்டதற்கு நான் மத்திய அரசின் பிரதிநிதி, அவர்கள் கூறிதான் நான் உங்களிடம் கூறுகிறேன் என்ற உறுதியை அவர் தந்தார்.
எனவே, இதனை மனதில் கொண்டு வருகின்ற 20ஆம் தேதி திமுக நடத்த இருந்த இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.