மூச்சுத்திணறல் காரணமாக கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமாக இருந்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்நது அவருக்கு உயிர் காக்கும் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. அவர் சிகிச்சை பெற்று வந்த போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், கட்சியினர் உள்ளிட்டோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று அவரது உடல் நலம் பற்றி விசாரித்தனர். இந்நிலையில், இன்று நண்பகல் 12.07 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்தது. ஜேட்லியின் மறைவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜேட்லி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், 'முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான அருண் ஜேட்லி திடீரென காலாமானார் என்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக தீபத்தை போற்றிப் பாதுகாக்கும் 'ஜெ.பி' என்று இன்றளவும் அழைக்கப்படும் மக்கள் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் முன்னணியில் நின்று கைதாகி நெருக்கடி நிலைமை காலத்தில் ஏறக்குறைய 19 மாதங்கள் மிசா சிறைவாசத்தை அனுபவித்த அருண் ஜேட்லி ஒரு ஜனநாயகவாதி மட்டுமல்ல, நாட்டிற்கு கிடைத்த மிகச்சிறந்த நாடாளுமன்றவாதிகளில் ஒருவர். செய்தி, வர்த்தகம், ராணுவம், சட்டம், நிதி உள்ளிட்ட அனைத்து முக்கிய துறைகளின் மத்திய அமைச்சராக பணியாற்றி பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.
நாடாளுமன்ற விவாதங்களில் தனித்திறமையுடனும், அறிவுக்கூர்மையுடனும் பதிலளிக்கும் ஆற்றல் பெற்றவர். பன்முகத்திறமை கொண்ட பண்பாள ஜேட்லி, தனது 66-வது வயதிலேயே மறைவெய்தியது பாரதிய ஜனதா கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவால் வாடும் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கும் அவருடன் பணியாற்றிய அமைச்சரவை சகாக்களுக்கும், எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.