நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், 23 ஆயிரத்து 644 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
விஜயபாஸ்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் பழனியப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வாக்காளர்களுக்கு பரிசு பொருள்கள், பணம் ஆகியவை விநியோகித்து ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டு விஜயபாஸ்கர் வெற்றி பெற்றுள்ளார் எனவும், அதனால் அவர் வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவித்து, தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்.
வாக்குகளை கவர முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், தேர்தல் ஆணையம் நிர்ணயித்ததற்கு அதிகமாக செலவு செய்துள்ளதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் கட்டுப்பாட்டு கருவிகளில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.