தமிழ்நாட்டின் திருச்சி சிவா, ரங்கராஜன், முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், சசிகலா புஷ்பா, கே.செல்வராஜ் ஆகிய ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதிவிக்காலம் ஏப்ரலில் நிறைவடையவுள்ளது. இந்த ஆறு இடங்களுக்கும் தேர்தல் நடைபெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி திமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகிய மூவரின் பெயர்கள் அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் மூன்றில் ஒரு பங்கு இடங்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பதவிக்காலம் நிறைவடையும் 55 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
![திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6260243_da.jpg)
வேட்புமனு தாக்கல் மார்ச் 2ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடைகிறது. இந்த வேட்புமனுக்கள் 16ஆம் தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்புமனுக்களை 18ஆம் தேதிவரை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான வாக்குப்பதிவு மார்ச் 26ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இந்த வாக்குகள் அதே நாள் மாலை 5 மணி முதல் எண்ணப்படுகிறன. மொத்தமாக தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும் நாள் மார்ச் 30ஆம் தேதியாகும்.