தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் திமுக சார்பில் சேப்பாக்கம்- திருவல்லிகேணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலின் முதன்முறையாக தனது வேட்புமனுவை இன்று திருவல்லிகேணி மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல்செய்தார்.
இதில் தனது மொத்த சொத்து மதிப்பு 26.50 கோடி ரூபாய் எனவும், அவற்றில் அசையும் சொத்து 21.13 கோடி ரூபாய், அசையா சொத்து 5.37 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சென்னை, டெல்டா மாவட்டங்களில் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகத் தன் மீது 22 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தாக்கல்செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பைவிட உதயநிதியின் சொத்து மதிப்பு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.