டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக தமிழ்நாடு முழுவதும் இன்று கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அதன்படி, திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்திலும், பொதுச்செயலாளர் துரைமுருகன் வேலூரிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு காஞ்சிபுரத்திலும், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு திருச்சியிலும், துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ. பெரியசாமி, பொன்முடி ஆகியோர் திண்டுக்கல்லிலும், துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோட்டிலும், துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா நீலகிரியிலும், அந்தியூர் செல்வராஜ் நாமக்கல்லில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றனர்.
சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்புக் கொடி ஏந்தி, மத்திய அரசின் புதிய வேளாண் திருத்த சட்டத்தை கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் முதலில் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை நீக்கக்கோரி முழக்கமும், போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. பின்னர் திமுக தலைவர் ஸ்டாலின் புதிய வேளாண் சட்டத்தை கண்டித்து உரையாற்றினார்.
முன்னதாக கடந்த டிச.03ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலமாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 60க்கும் அதிகமான மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக டிசம்பர் 5ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட விவசாய திருத்தச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பலை வீசிவருகிறது. இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றுகூறி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்றுடன் ஒன்பதாவது நாளாக போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், டிசம்பர் 8ஆம் தேதியன்று நாடு தழுவிய பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:டெல்லியில் போராடும் விவசாயிகள் - குரல் கொடுத்த நடிகர் கார்த்தி!