80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் விருப்பப்பட்டால் தபாலில் வாக்களிக்கலாம் என நேற்று (டிச.22) தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என திமுக மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் தொடர்ந்த வழக்குகள் ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தபால் ஓட்டுகள்
தேர்தலின்போது நாட்டின் பாதுகாப்புப் படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றிவரும் காவல் துறை மற்றும் ஆயுதப் படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதிசெய்யும் விதமாக தபால் ஓட்டுகள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தில் திமுக மனு
தபால் ஓட்டைப் பெறுவதற்காக வாக்குச்சாவடி அலுவலர் தான் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களிடம் வழங்க வேண்டும் என விதி உள்ளதால், இதில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், எனவே இந்த முறையை திரும்பப்பெற வேண்டும் எனவும் திமுக சார்பில் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டது. அதேசமயம் 80 வயதிற்கு மேலான மூத்தக் குடிமக்களுக்கென தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
புதிய தபால் ஓட்டு முறைக்கு எதிராக திமுக
இந்நிலையில் தாங்கள் அளித்த மனு மீது தேர்தல் ஆணையம் இதுவரை உரிய முடிவெடுக்கவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (டிச.23) விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த விவகாரம் தொடர்பான மற்றொரு வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் ( திமுக மாநிலங்களவை உறுப்பினர்) கோரிக்கை வைத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.
தபால் வாக்கு முறையை எதிர்த்து டிசம்பர் 3 இயக்கத்தின் (மாற்றுத்திறனாளிகள் சார்பாக வழக்கு தொடர்ந்த அமைப்பு) தலைவர் தீபக் தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் திமுகவின் வழக்கும், டிசம்பர் 3 இயக்கத் தலைவர் தீபக்கின் வழக்கும் ஒரே அமர்வில் ஜனவரி 7ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிகிறது.