விரிசலை உண்டாக்கிய அழகிரியின் அறிக்கை
உள்ளாட்சித் தேர்தலில் இடங்கள் ஒதுக்கீடு செய்வதில், திமுக கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக செயல்படுவதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரியின் அறிக்கை திமுக கூட்டணிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது. கே.எஸ்.அழகிரியின் கருத்தை முன் வைத்து டெல்லியில் நடைபெற்ற குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தை திமுக புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். அதில் திமுக கூட்டணி குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாநில அளவில் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கு திமுக வாக்குவங்கி பெரிதும் காரணம். அதே போல் தேசிய அளவில் தற்போதைய பாஜக கட்சியை எதிர்பதற்கு காங்கிரஸ் கட்சிக்கு திமுகவின் உதவி பெரிதும் தேவைப்படுகிறது. இந்த கூட்டணி தொடரவேண்டும் என்பதே அகில இந்திய தலைமையின் கருத்தாக இருக்கும் என்று சொல்லப்படுகின்றது.
துரைமுருகன் பதிலடி
கே.எஸ். அழகிரி முதலில் காட்டமாக அறிக்கை வெளியிட்டாலும் பின்னர் திமுக கூட்டணி தொடரவேண்டும் என்றே சொல்லி வருகிறார். நான் அடிமட்ட காங்கிரஸ் தொண்டர்களின் கருத்தையே அறிக்கையில் வெளிப்படுத்தியதாகத் தெரிவித்தார். ஆனால், திமுக பொருளாளர் துரைமுருகன் இதைப்பற்றி பேசும்போது, ”காங்கிரஸ் இல்லையென்றால் எங்களுக்கு என்ன நஷ்டம், அவர்களுக்குத்தான் நஷ்டம். காங்கிரஸ் செல்ல வேண்டுமென்றால் செல்லட்டும்” என தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் எம்.பி.ஜெயகுமார், தலையிருக்க வால் ஆடக்கூடாது, துரைமுருகன் கருத்தால் கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மாறுபட்ட கருத்து வேறுபாடு
இவ்வாறு திமுக - காங்கிரஸ் தலைவர்கள் கருத்து கூறிவரும் நிலையில் திமுக தரப்பில், காங்கிரஸ் மாநில தலைவரை நீக்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்படும் என்று கூறப்படுகின்றது. நாடாளுமன்ற தேர்தல் நேரம் முதலே தொடங்கி, திமுகவின் கே.என்.நேரு, காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் போன்ற பல நிர்வாகிகளுக்கு மாறுபட்ட கருத்துகள் இருந்துவந்தது. தற்போது கே.எஸ். அழகிரி காட்டமாக திமுகவை விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளதால் அழகிரியின் மாநில தலைவர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
கே.எஸ். அழகிரி மீது பாயுமா நடவடிக்கை?
காங்கிரஸ் வெற்றிக்கு திமுக கூட்டணி தேவை இருப்பதாலும், தேசிய அளவில் திமுக தேவை இருப்பதாலும் திமுக வைக்கும் நிபந்தனைக்கு செவி சாய்த்தாக வேண்டிய நிலையில், காங்கிரஸ் தேசிய தலைமை உள்ளது. ஆனால், அவ்வாறு மாநிலத் தலைவர் மேல் நடவடிக்கை எடுத்தால் காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட தொண்டர்கள் வரை பாதிப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றாலும் திமுகவுடன் கூட்டணி தொடருமா? என்ற கேள்வியுடன் இக்கட்டான நிலையில் தற்போது உள்ளது காங்கிரஸ் கட்சி.
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் போனால் போகட்டும் - துரைமுருகன்