தமிழ்நாட்டில் நடைப்பெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக-தேமுதிக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைப்பெறும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிமுகவின் சார்பில், அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, தங்கமணி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கமும், தேமுதிகவின் சார்பில் பார்த்தசாரதி, அழகாபுரம் மோகன்ராஜ் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆம்பூர் அருகே நடந்த ஒரு கூட்டத்தில் தேமுதிகவின் துணை பொது செயலாளர் சுதீஷ் பேசுகையில், "2011 ஆம் ஆண்டு தேமுதிக, அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி அமைக்காவிட்டால், அதிமுக என்ற ஒரு கட்சி தற்போது இருந்திருக்காது. மேலும், தேமுதிகவிடம் கூட்டணி வைக்க, அதிமுகதான் கெஞ்சுகிறது. நாங்கள் கெஞ்சவில்லை. மாநிலங்களவை உறுப்பினருக்காக நான் ஒன்றும் கெஞ்சவில்லை. இது தவறான செய்தி. விஜய்காந்த் தலைமையில் கூட்டணி அமைத்தால் நிறைய கட்சிகள் கூட்டணியில் இடம் பெற தயாராக இருக்கிறது" என்றார்.
சுதீஷ் ஏற்கனவே தனது முகநூல் பக்கத்தில், "நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு" என்று பதிவிட்டிருந்த நிலையில், தற்பொழுது அதிமுகவை தாக்கி பேசியது, தேமுதிக தனித்துப் போட்டியிடலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.