சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிடர் கழகம் சார்பில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது புகார் அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலிபூங்குன்றன், 'குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உட்பட 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இந்த விபத்தை கண்டு திராவிடர் கழகத்தின் துணை அமைப்புகள் கொண்டாடியதாக, பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவதூறு பரப்புவது கருத்துச் சுதந்திரம் ஆகாது:
எந்த ஒரு ஆதாரமுமில்லாமல் தவறானக் கருத்தை அண்ணாமலை பதிவிட்டுள்ளார்' என அவர் கூறினார்.
மேலும் பொதுமக்களிடையே திராவிடர் கழகத்தைப் பற்றி தவறான கருத்தைப் பரப்புவதற்காக உள் நோக்கத்தோடு செயல்படுவது, கருத்துச் சுதந்திரம் கிடையாது எனவும் கலிபூங்குன்றன் கூறினார்.
தவறான தகவல்களை பரப்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், சட்ட நிபுணர்களிடம் ஆலோசனைப் பெற்று நடவடிக்கை எடுப்பதாகக் காவல் துறையினர் கூறியதாகவும் கலிபூங்குன்றம் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பெங்களூரு விமான நிலைய சம்பவம்: விஜய்சேதுபதிக்கு அழைப்பாணை