சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வாங்க அதிகளவு மக்கள் கூடும் இடங்களான புரசைவாக்கம், தியாகராய நகர், பூக்கடை மற்றும் வண்ணாரப்பேட்டை ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக 16 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பைனாகுலர் மூலமாக சுழற்சி முறையில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. முக்கியமாக தி.நகரின் ஆறு இடங்களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தி அதன் மூலம் நடப்பு நிகழ்ச்சிகளை Face Recognition தொழில்நுட்பம் மூலமாக கண்காணித்து, பழைய குற்றவாளிகள் கூட்டத்தில் இருந்தால் உடனடியாக கண்டுபிடிக்கும் புதிய முறை கையாளப்பட்டு வருகிறது.
மேலும் தி.நகர் பகுதியில் 17 காவலர்கள் body worn camera-ஐ பொருத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 4 இடங்களில் 11 தற்காலிக கட்டுப்பாட்டு அறை அமைத்து சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூட்டத்தில் காணாமல் போகும் சிறுவர்களை கண்டுபிடித்து கொடுக்கும் பணிகளிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 5 டிரோன் கேமராக்கள் மூலமும், face recognition என்ற செல்போன் செயலி மூலம் சுமார் 100 காவலர்கள் குழுக்களாக பிரிந்தும், வாட்ஸ் ஆப் மூலமாக உடனுக்குடன் தகவல்களை பரப்பியும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை மற்றும் பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மூலம் ரோந்து சென்று போக்குவரது நெரிசல் ஏற்படாத வண்ணம் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் நடமாடும் உடைமைகள் சோதனை கருவி வாகனத்தின் மூலமாக, பொதுமக்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பெண்களின் கழுத்தில் உள்ள தங்க நகைகள் திருடப்படாமல் தடுக்க, கழுத்தில் துணிகளை சுற்றி கவசமாக கட்டிக்கொள்ள வலியுறுத்தப்பட்டு, துணி கவசங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக சென்னையில் கோயம்பேடு, மாதவரம் மற்றும் கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகிற தீபாவளி பண்டிகையன்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் படி மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் எனவும், மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு விற்பனையாகும் விலை உயர்ந்த ஸ்வீட்; ஒரு கிலோ காஜு கலாஷ் 20 ஆயிரம் ரூபாயாம்!!