சென்னை: இந்த ஆண்டிற்கான தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மேலும், தீபாவளி பண்டிகையானது, இம்முறை ஞாயிற்றுக்கிழமை வருவதால் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை (நவ-10) அன்றே தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிடுவர். அவ்வாறு பயணம் மேற்கொள்வோர்களுக்கு முன்பதிவானது இன்று (அக் 11) தொடங்கி உள்ளது என்று போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், "தீபாவளி பண்டிகையொட்டி, தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் தொடர்பான அறிவிப்பை போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுடன் கூட்டம் நடத்தி, போக்குவரத்துத் துறை அமைச்சர் விரைவில் அறிவிக்க உள்ளார்.
மேலும், தற்போது தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக, சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்குச் செல்பவர்கள் அதிகம். இதனால், விரைவு பேருந்துகளைப் பொறுத்தவரை 30 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்ய முடியும்.
அந்த வகையில், தீபாவளிக்காக சொந்த ஊர் செல்லும் பெரும்பாலானோர் வெள்ளிக்கிழமை (நவ.10) பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டு இருப்பார்கள். அவ்வாறு பயணம் மேற்கொள்வோர், இன்று (அக் 11) முதல் இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
நாளை (அக்.12) முன்பதிவு: இதைத் தொடர்ந்து, சிலர் சனிக்கிழமை (நவ 11) சொந்த ஊர்களுக்குச் செல்ல திட்டமிட்டு இருப்பார்கள். அதற்கு முன்பதிவு செய்பவர்களுக்கு நாளை (அக் 12) முன்பதிவானது தொடங்க உள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் முன்பதிவு செய்பவர்கள் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது tnstc செயலி வாயிலாக பேருந்து இருக்கைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இது மட்டுமின்றி, அந்தந்த கழகங்களில் உள்ள முன்பதிவு மையத்திலும் முன்பதிவு செய்யலாம்" என்று தெரிவித்துள்ளனர்.
முடங்கிய இணையதளம்: தீபாவளிக்காக சொந்த ஊர்களுக்குச் செல்பவர்கள் நவம்பர் 10ஆம் தேதி திட்டமிட்டுள்ளனர். இதற்கான முன்பதிவு இன்று (அக் 11) தொடங்கிய நிலையில், பயணிகள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்வதால் TNSTC இணையதளம் முடங்கி உள்ளது. மேலும் சரிவர எங்களால், டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடிவது இல்லை என்று பயணிகள் தரப்பில் குற்ற ம்சாட்டி உள்ளனர்.
இது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறும்போது, “இன்று அனைவரும் ஓரே நேரத்தில் லாக்-இன் செய்வதால் சர்வர் டவுன் ஆகி உள்ளது, சில மணி நேரத்தில் சரியாகி விடும்” என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஷூட்டிங் சென்ற கிராமத்தில் குடிநீர் வசதி செய்து கொடுத்த விஷால்.. குவியும் பாரட்டுகள்