சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். ஒற்றை தலைமையைக் கைப்பற்ற ஈபிஎஸ் அணியினர் தீவிரம் காட்டி வந்தனர். ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்றங்களை நாடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது உள்ள நிலையில் தலைமை நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அதிகளவில் ஈபிஎஸ் அணியில் பயணம் செய்கின்றனர். மேலும் அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் சாவியும் ஈபிஎஸ் வசம் உள்ளது.
பொதுக்குழுவுக்குத் தடை கோரி உச்சநீதிமன்ற மேல்முறையீடு செய்த ஓபிஎஸ், கடந்த சில நாட்களாகத் தமிழகம் முழுவதும் நிர்வாகி பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் 80 சதவீதத்திற்கு மேல் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில், "விரைவில் பொதுக்குழு நடைபெறும்" என ஓபிஎஸ் கூறியிருந்தார். சட்டப்போராட்டம் ஒருபுறம் இருக்கக் களத்தில் ஈபிஎஸ் தரப்பை எதிர்ப்பதற்கு ஓபிஎஸ் அணியினர் தயாராகி வருகின்றனர். மேலும், இதன் மூலம் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பிற்குச் சாதகமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கையாக முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில், "வருகின்ற டிச.21ஆம் தேதி காலை 10 மணிக்கு அதிமுகவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், போட்டி பொதுக்குழு, ஈபிஎஸ் தரப்பை எதிர்கொள்வது, உச்சநீதிமன்றத்தில் இருக்கக் கூடிய மேல்முறையீட்டு வழக்கு, தேர்தல் ஆணையத்தை அணுகுவது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'கிரண்பேடி ஆயுதம் விஷம்;தமிழிசை ஆயுதம் சர்க்கரை' - நாராயணசாமி விளாசல்!