சென்னை: பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்கான அரசாணை ஜனவரி 1ஆம் தேதி தமிழக அரசு சார்பாக வெளியிடப்பட்டது. அதில் 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 42 குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு வழங்கப்படும் ஒரு கிலோ அரிசி 35.20 ரூபாய் மதிப்பிலும், ஒரு கிலோ சர்க்கரை 40.61 ரூபாய் மதிப்பிலும், ஒரு கரும்பு 33 ரூபாய் மதிப்பிலும் நிர்ணயம் செய்யப்பட்டு, அதனை கொள்முதல் செய்ய மொத்தமாக 238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ரூபாய் ஒதுக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் அறிவிப்பில், பொங்கல் பரிசுத் தொகை குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இதனை அடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசுக்கு விடுத்தனர்.
இதன் தொடர்ச்சியாக, தமிழக அரசு பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூபாய் 1,000 ரொக்கமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருள் இல்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூபாய் 1,000 பொங்கல் பரிசு ரொக்கத் தொகை வழங்கப்படும் எனவும், இதனை நியாய விலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது இந்த பொங்கல் பரிசுத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் நாளை முதல் நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் எனவும், பொங்கல் பரிசுத் தொகை வருகிற 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழக பாரம்பரியம்; இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..!