சென்னை: பெருந்தொற்று காலத்தில் ரயில் பயணிகளுக்கு உதவும் வகையில், தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம், சிவசங்கர் தொண்டு நிறுவனம், பிபிஎன்எஸ் காஞ்சிபுரம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மளிகை பொருள்கள் அடங்கியப் பைகளைச் சுமை தூக்கும் தொழிலாளர்கள், ரயில்வே கடைநிலைப் பணியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆயிரத்து 31 ரூபாய் மதிப்பிலான இந்தத் தொகுப்பில் அரிசி, துவரம் பருப்பு, மைதா, ரவை, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னையைச் சேர்ந்த அன்னலட்சுமி உணவகம் ஆயிரத்து 500 பொட்டலங்களில் சாம்பார் சாதம், லெமன் சாதம் ஆகியவற்றை சென்னை கோட்ட அலுவலர்களிடம் வழங்கியதாகவும், இந்த உணவுப் பொட்டலங்கள் அனைத்தும் பயணிகளுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
தொற்று நோய் முன்னெச்சரிக்கை விதிகளை பின்பற்றி பொருள்கள் பயணிகளுக்கு வழங்கப்பட்டது. அன்னலட்சுமி உணவகம் சார்பில் பயணிகளுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் சேவை ஊரடங்கு காலம் முழுவதும் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.