தமிழ்நாடு மாநில பாஜக சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் அளித்த புகாரில் ” ’கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனல் வெளியிட்ட காணொலிகள், இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தியுள்ளது. முருகக் கடவுள் மற்றும் கந்த சஷ்டி கவசம் பாடல் குறித்தும் மிகவும் அறுவறுக்கத்தக்க கருத்துகளையும், இந்து மதத்தையும் அதன் கடவுளையும் கலங்கப்படுத்தியுள்ளனர். மேற்கண்ட சேனலில் இந்துமத வழிபாட்டு முறைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது இந்து மக்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தி, மக்களின் மத்தியில் ஒருவித அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தியதால் அந்தக் காணொலி வெளியிட்ட சுரேந்திரன், நடராஜன் மற்றும் சேனல் நிர்வாகத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் யூடியூப் சேனல் மற்றும் நிர்வாகிகள் மீது சாதி, மத, இன ரீதியான மோதலைத் தூண்டுவது, அவதூறு பரப்புதல் உள்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன்பிணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ”கலாசாரம், நம்பிக்கை என்ற பெயரில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களையும் யூடியூப் சேனல் மூலம் வழங்கி வருகிறோம். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வெளியிட்ட பதிவு தொடர்பாக ஆறு மாதத்திற்கு பிறகு தற்போது (ஜூலை 14) என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வலதுசாரி சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பணியாற்றிவருவதால், அதை முடக்கும் நோக்கில் வழக்கு பதியப்பட்டுள்ளதால், எனக்கு முன்பிணை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.