சென்னை: எழும்பூரைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கத்தின் தலைவர் அம்பேத் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், “மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர்கள் பொதுப் பிரிவில் 16 வார்டுகளும், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும் என 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீடு கொள்கைப்படி, பட்டியலினத்தவர்களுக்கு 18 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால் கூடுதலாக நான்கு வார்டுகளை ஒதுக்கக் கோரி மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர், வார்டு மறுவரையறை குறித்து 2018ஆம் ஆண்டே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளது.
அதனால், தாமதமாக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வார்டு மறுவரையறையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: பொய்யான வாக்குறுதிகளை அளித்து குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்த திமுக - இபிஎஸ்