சென்னை: மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாற்றாக, இயந்திரக் கருவி மூலம் ரீசார்ஜ் செய்யக்கூடிய ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கும் பணியை சென்னை உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த புதிய பேட்டரி தொழில்நுட்ப காப்புரிமைக்காக விண்ணப்பித்த ஆராய்ச்சியாளர்கள், ஜிங்க்-ஏர் பேட்டரிகளை உருவாக்கப் பெரிய தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தற்போது உள்ள லித்தியம்-அயன் பேட்டரிகளுடன் ஒப்பிடுகையில், இவை சிக்கனமானவை மட்டுமின்றி நீண்ட ஆயுட்காலம் கொண்டவையாகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளை இரு சக்கர, மூன்று சக்கர மின்சார வாகனங்களில் பயன்படுத்த முடியும்.
இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் மாசுபாட்டைக் குறைக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளால் இந்திய மின்சாரத்துறை சமீபகாலமாக மிக வேகமாக வளர்ச்சி கண்டுவருகிறது. மின்சார வாகனங்களில் பெரும்பாலும் லித்தியம்-அயன் பேட்டரிகள்தான் பயன்படுத்தப்படுகின்றன. லித்தியம்-அயன் பேட்டரிகளை பெருமளவில் சீனா உற்பத்தி செய்வதால், மின்சார வாகன பேட்டரி உற்பத்தித் துறையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் லித்தியம்-அயன் பேட்டரிகளை இறக்குமதி செய்கின்றன.
லித்தியம்-அயன் பேட்டரிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே கிடைக்கும் என்பது உள்ளிட்ட பல்வேறு வரம்புகள் உள்ளன. மேலும் இந்தியச்சந்தையின் வெவ்வேறு தேவைகளை லித்தியம்-அயன் பேட்டரிகளால் மட்டுமே பூர்த்தி செய்துவிட முடியாது. லித்தியம்-அயன் பேட்டரிகளுக்கு மாறாக குறைந்த செலவில் புதிய சாதனம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி.யின் ரசாயனப் பொறியியல் துறை உதவிப் பேராசிரியரான அரவிந்த்குமார் சந்திரன் மற்றும் அவரது ஆராய்ச்சிக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். துத்தநாகம் பரவலாகக் கிடைக்கக் கூடியது என்பதால், ஜிங்க்-ஏர் பேட்டரிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து ரசாயனப் பொறியியல் துறை உதவிப்பேராசிரியர் அரவிந்த்குமார் சந்திரன் பேசும்போது: ’மின்சார வாகனங்களுக்கான ஜிங்க்-ஏர் பேட்டரிகளுக்கு எதிர்கால மாதிரியை உருவாக்கும் பணியில் குழு ஈடுபட்டுள்ளது. தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, சரிசெய்வதற்கான வழிகளைக் கண்டறிந்து வருகிறோம். தற்போது ஜிங்க் - ஏர் செல்களை உருவாக்கி, மின்சார வாகனங்களுக்கான ஜிங்க்-ஏர் தொகுப்பாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெட்ரோல் நிலையங்களைப் போன்று, 'ஜிங்க் ரீசார்ஜ் நிலையங்களை' தனியாக அமைக்க வேண்டும். ஜிங்க்-ஏர் பேட்டரிகளைப் பயன்படுத்துவோர் பேட்டரி தீர்ந்துவிடும்போது, பெட்ரோல் மையங்களில் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பிச் செல்வதைப் போன்று இந்த நிலையங்களுக்கு வந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதனால் 'பேட்டரி பரிமாற்றம் செய்வதற்குப் பதில் ஜிங்க் கேசட்களுக்கு பதிலாக முழுவதும் ரீசார்ச் செய்யப்பட்ட 'ஜிங்க் கேசட்களை 'ஜிங்க் ரீசார்ஜ் நிலையங்களில்' மாற்றிக் கொள்ளலாம். பயன்படுத்தப்பட்ட 'ஜிங்க் கேசட்களை சூரியஒளித்தகடுகள் (solar panels) மூலம் ரீசார்ஜ் செய்யவும் ஆராய்ச்சியாளர்கள் முயன்று வருகின்றனர். மின்சார வாகனங்கள் விபத்தில் சிக்கும் மோசமான தருணங்களில் கூட இவை தீப்பிடிக்காது’ என்றார்.
துத்தநாகம் இந்தியாவில் பரவலாகக்கிடைக்கக் கூடியது. துத்தநாக வரவு, லித்தியம்-அயன் பேட்டரிகளின் இறக்குமதியைக் குறைக்கும். லித்தியம்-அயன் பேட்டரிகளோடு ஒப்பிடுகையில், துத்தநாகம் விலை குறைந்தது. ஜிங்க்-ஏர் பேட்டரிகள் நீரின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை. நீண்ட ஆயுள் கொண்டவை ஆகும். ஜிங்க்-ஏர் பேட்டரிகள் நல்ல செயல்திறனைக் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:பட்டப்படிப்புகளை பாதியில் கைவிடுவோர் திறந்தநிலைப் பல்கலைகழகம் மூலமாக தொடர வேண்டும் - சென்னை ஐஐடி இயக்குநர் வேண்டுகோள்!