சென்னை: வடகிழக்கு பருவமழை அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கியதில் இருந்து, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் நவம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரையில், கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து, வடகிழக்கு பருவமழை குறித்து எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் அக்டோபர் 1 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை 110.8 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது இயல்பான மழை அளவைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவு ஆகும். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் நவம்பர் 2ஆம் தேதி வரை, 1 மாவட்டத்தில் அதிகமான மழைப்பொழிவும், 30 மாவட்டங்களில் குறைவான மழைப்பொழிவும், 7 மாவட்டங்களில் இயல்பான மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 8.30 மணி வரை 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம், மாஞ்சோலை மற்றும் காக்காச்சி பகுதிகளிலும், கடலூர் மாவட்டத்தில் அண்ணாமலை நகர் பகுதியிலும்
கனமழை பதிவாகி உள்ளது. மாநில, மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும்
முறையே, 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசிகளுடனும், கூடுதலான அலுவலர்களுடனும் இயங்கி வருகின்றன.
பொதுமக்கள், Whatsapp எண் 94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம். மேலும், TN-SMART இணைய தளம் மூலமாக சேகரிக்கப்படும் மழை, நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பு, பேரிடர்களால் ஏற்படும் சேதங்கள் குறித்து விளக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளான வைகை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சாத்தனூர் உள்ளிட்ட அணைகளிலும், சென்னைக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கங்களான செங்குன்றம், செம்பரம்பாக்கம் மற்றும் தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்களில், 75 சதவீதத்திற்கும் மேல் நீர் இருப்பு உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு, கோயம்புத்தூர் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் (TNDRF) 400 வீரர்கள் கொண்ட 12 குழுக்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், நவம்பர் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை வரப்பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கடலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களிடம் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக தொடர்பு கொண்டு, கனமழையினை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேட்டறிந்து அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!