சென்னை: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 1,000 ஆண்டுகள் பழமையான சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்களுக்காக வசூலித்த 30 லட்ச ரூபாயை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்க கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன் நேற்று (நவ.28) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மிலாப் செயலி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டுமென கோரினார். கோயில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் சீரமைப்பு பணிகள் 80 சதவீதம் முடிந்துவிட்டதாகவும், திருப்பணிக்கு தேவைப்படும் பணத்தை அளிக்க நன்கொடையாளர்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிகளுக்காக வசூலித்த தொகையை விசாரணை நீதிமன்றத்திற்கு மாற்ற மிலாப் செயலி நிறுவனத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, நன்கொடையாளர்கள் குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
இந்த வழக்கை கோயில் சொத்துக்கள் மீட்பு மற்றும் சிலைக்கடத்தல் தடுப்பு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: போலி ஆவணத்திற்கு இழப்பீடு: தமிழக அரசை எச்சரித்த உயர்நீதிமன்றம்!