சென்னை: கடந்த 2001-2006ஆம் ஆண்டுகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த ஒ.பன்னீர்செல்வம், டான்சி வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது, முதல்வராகவும், பின்னர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2006-ல் திமுக ஆட்சி அமைத்த நிலையில், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஓ.பி.எஸ் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், ஓ.பி.எஸ் அவரது மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத் குமார், தம்பி ஓ.ராஜா, அவரது மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி ஓ.பாலமுருகன், அவரது மனைவி லதா மகேஸ்வரி ஆகிய 7 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டனர்.
தேனி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், 2009 ஜூலை 30ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், "2001 சட்டமன்றத் தேர்தலின் போது ஓ.பி.எஸ். கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு, 17 லட்சத்து 44 ஆயிரத்து 840 ரூபாய் என்றும், வெற்றிக்கு பிறகு வருவாய்த்துறை அமைச்சர், முதலமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர் என்று பதவிகள் வகித்த 5 வருடங்களில், ஓ.பி.எஸ்ஸின் சொத்து மதிப்பு 1 கோடியே 77 லட்சம் ரூபாயாக உயர்ந்ததாகவும், இது அவரது வருமானத்தைவிட அதிகமானது" என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கை வேறு மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஓ.பி.எஸ். தாக்கல் செய்த வழக்கில், மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றி 2012ஆம் ஆண்டு ஜனவரியில் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் ஓ.பி.எஸ் மீது வழக்கு தொடர்வதற்காக கொடுத்திருந்த அனுமதியை திரும்பப் பெற்று, 2012 அக்டோபர் 27-ம் தேதி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் சிவகங்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் விதமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்பதால், வழக்கைத் திரும்பப் பெறுவதாக தெரிவித்திருந்தது. அந்த அறிக்கையை ஏற்ற நீதிமன்றம், ஒ.பி.எஸ். உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தது.
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோக்கு எதிரான வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஒவ்வொரு உத்தரவுகளையும் நாம் ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.
மீண்டும் விசாரணை ஏன்?: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையின் பின்னனியில் யாரோ இருந்து செயல்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சிக்கு முன்னர் ஒரு நிலைபாடும், அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒரு நிலைபாட்டையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ளது. தவறுகள் நடைபெற அனுமதித்தால் அது புற்றுநோய் போல இந்த சமுதாயத்தை சிதைத்து விடும்.
272 சாட்சிகளிடம் 3 ஆண்டுகள் விசாரணை நடத்தியும், ஏன் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை முறையாக நடத்தவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாமல், அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது ஏன்? எனவும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இது போன்ற செயல்பாடுகளால் உச்சநீதிமன்ற உத்தரவின் படி உருவாக்கப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் நோக்கமே நீர்த்து போய் விட்டது. அதிமுக ஆட்சியில் இருக்கும் போது எந்த நடவடிக்கையையும் எடுக்காத லஞ்ச ஒழிப்புத்துறை, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் அதிகமாக சொத்துக்குவித்ததாக விசாரணையை தொடங்குவதை ஏற்க முடியாது.
எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை நீதிமன்றம் கண்கானிக்க வேண்டிய கட்டாய நிலையில் தற்போதைய செயல்பாடு உள்ளது. தவறுக்கு துணைபோகும் எந்த நடவடிக்கையையும் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்காது. சட்டம் எல்லாருக்கும் பொதுவானது. குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் சொந்தமானது இல்லை.
பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு வருமானத்தை அதிகரித்திருப்பதாக கூறிய லஞ்ச ஒழிப்புத்துறை, அரசு வழக்கை திரும்ப பெருவதாக அறிவித்ததும், ஆதாரங்கள் இல்லை, எந்த குற்றமும் நடைபெறவில்லை என கூறுவதை ஏற்க முடியாது. குற்றம் சாட்டப்படுள்ள ஒ.பன்னீர்செல்வம் உட்பட 7 பேரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 27ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: OPS : சொத்து குவிப்பு வழக்கில் ஓ.பி.எஸ். பதிலளிக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!