சென்னை: பியூர் சினிமா புத்தக அங்காடி திறப்பு விழாவில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், அங்காடியைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புத்தக வாசிப்பு மிகவும் அவசியமானது. எந்த காலகட்டத்திலும் நம்மை மேம்படுத்திக் கொள்ளவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும், அடுத்த கட்டத்திற்கு நகர்த்திக் கொள்ளவும், வாசிப்பு மிக அவசியமானது. குறிப்பாக இந்த காலகட்டத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். சினிமாவில் இருப்பவர்களே படிக்க வேண்டும்.
இன்றைய சினிமா, குறிப்பாக தமிழ் சினிமா சமூகத்தை நோக்கி நகரும் சினிமாவாக உள்ளது. கட்டாயம் அனைவரும் படிக்க வேண்டும். படிப்பதன் மூலம் நம்முடைய பழக்கங்களில் இருந்து, அல்லது பழக்கி வைக்கப்பட்டுள்ள விஷயங்களில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியும்.
பிறக்கின்ற எல்லோருக்கும், எல்லாமும் சமமாக கிடைக்க வேண்டும் என்பது அடிப்படை, அது பிறப்புரிமை. அதை மறுக்கின்ற எதுவாக இருந்தாலும், எந்த ரூபத்தில் இருந்தாலும், அதை எதிர்ப்பதும், ஒடுக்குவதும், வீழ்த்துவதும் சுதந்திர மனிதர்களாகிய, விடுதலையை விரும்பும் மனிதர்களாகிய நம்முடைய அனைவரது கடமை.
அதைப்பற்றி பேசிய உதயநிதியுடன் நாம் அனைவரும் நிற்க வேண்டும். நானும் அவருடன் நிற்கிறேன், நானும் அவருக்கு ஆதரவு தருகிறேன். இதை நான் இந்த இடத்தில் கூறுவதற்கான காரணம் என்னவென்றால், நமக்கு இதுவரை தவறாகக் கற்பிக்கப்பட்டுள்ள விடுதலையிலிருந்து, வாசிப்பில் இருந்து கிடைக்கும் என நம்புகிறேன்” என்றார்.
இந்தியா, பாரத் பெயர் விவகாரம் குறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, “எனக்கு இந்தியா என்ற பெயரே போதும், அதுவே சரியானதாக உள்ளது” என்றார். தேசிய விருது குறித்த கேள்விக்கு, “தேசிய விருது பற்றி எனக்கு வேறு ஒரு கருத்து உள்ளது. மற்றவர்கள் பேசுவதில் இருந்து எனக்கு வேறு விதமான கருத்து உள்ளது. நம்முடைய படத்தை ஒரு விதமான தேர்வுக்கு நாம் அனுப்புகிறோம் என்றால், அந்த தேர்வுக் குழுவின் முடிவுக்குக் கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலுக்கு உட்பட்டு படத்தை அனுப்புகிறோம்.
அந்த படத்தை அனுப்பும் போதே, அதன் முடிவு என்னவாக இருந்தாலும் நாம் உடன்படுகிறோம் என்று கூறி தான் அனுப்புகிறோம். அந்த படத்துக்கு விருது கிடைக்கிறது, கிடைக்கவில்லை என்பது அந்த தேர்வுக் குழுவின் முடிவு. அந்த முடிவு படத்தின் தரத்தையோ, சமூகத்தின் மீதான பங்களிப்பையோ தீர்மானிப்பதில்லை.
ஜெய்பீம் படம் வந்த பிறகு, அந்த குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எந்த மாதிரியான மாற்றங்கள் வந்திருக்கின்றது என்பது படத்தின் தாக்கத்தைப் பொறுத்து உள்ளது. ஒரு படத்தின் தரத்தை ஒரு குறிப்பிட்ட தேர்வுக்குழு தீர்மானிக்க முடியாது என்பதே என்னுடைய கருத்து. ஒரு தேர்வுக்குழுவில் உள்ள ஒருவரின் விருப்பு வெறுப்பு, அந்த குழுவின் விருப்பு வெறுப்பாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து ஜூரியாக சென்றுள்ளதால் தமிழ்நாட்டிற்கு நிறைய விருது கிடைக்க வேண்டும் என்பது கிடையாது. அந்தக்குழு என்ன தீர்மானிக்கிறதோ அதை பொறுத்து தான் அமையும். ஒரு குழு தேர்ந்தெடுக்காததாலேயே அந்த படம் சிறந்த படம் இல்லை என்று ஆகிவிடாது” என்றார்.
உதயநிதி தலைக்கு 10 கோடி ரூபாய் என்று விலை நிர்ணயித்தது குறித்த கேள்விக்கு, “அது வன்முறையைத் தான் தூண்டுகிறது” என்றார். விடுதலை இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு, “விடுதலை இரண்டாம் பாகம் அடுத்த வருடம் ஆரம்பத்தில் வெளியாகி விடும். கிட்டத்தட்ட பணிகள் முடிந்து விட்டது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சனாதனம் குறித்து பேசியர்களுக்கு நிச்சயம் தண்டனை உண்டு - ஹெச்.ராஜா