நீட் தேர்வு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யா, நீதிமன்ற செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்திருந்தார்.
இதுகுறித்து இயக்குநர் தங்கர்பச்சான் விடுத்துள்ள அறிக்கையில், "கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள்தான் முதல் தலைமுறையாக கல்வி பெற்று மருத்துவர்களாக உயர்ந்தார்கள்.
அத்தகையவர்களால்தான் தான் இன்று மருத்துவ சேவை அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதனை ஒழிப்பதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நீட் தேர்வு எனும் அநீதி தேர்வு முறையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் நின்று போராடி தீர்வை கண்டிருக்க முடியும்.
தேர்தல் கூட்டணியை மனதில் கொண்டு தனித்தனியாக எதிர்ப்புகளை தெரிவித்து ஆழ்ந்த இரங்கல் செய்திகளை தெரிவிப்பதாலும், பண உதவியும் அளிப்பதாலும் மாணவர்களை இந்த சதியில் இருந்து காப்பாற்ற முடியாது.
ஏழைப் பிள்ளைகள் 12 பேர் இதுவரை நீட் தேர்வு பலி கொண்டிருக்கிறது. உள்ளக்குமுறலில், வேதனையில், கோபத்தின் உச்சத்தில் உள்ள தமிழ்நாட்டு மக்களின் மனங்களுக்கு திரைப்பட நடிகர் சூர்யா அவர்களின் அறிக்கை ஆறுதலையும் நம்பிக்கையும் அளித்திருக்கின்றது.
தமிழ்நாட்டில் அரசியல்வாதிகள் செய்யவேண்டிய வேலையை ஒரே அறிக்கையில் சூர்யா செய்திருக்கிறார் என மக்கள் நினைக்கிறார்கள். சூர்யா கூறி உள்ளது அவருடைய சொந்த கருத்துக்கள் அல்ல. அவை அனைத்து கருத்துகளும் மக்களின் மனதில் இருப்பவை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
தேர்தல் கூட்டணி கணக்கை ஒதுக்கி வைத்துவிட்டு தன்னலம் மறந்து தங்கள் பகை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களுக்காக ஒன்றிணைந்து செயல்படவேண்டும். மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது? " என அந்த அறிக்கையில் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.