சென்னை: பள்ளி கல்வித்துறை குறித்து, உயர்நீதிமன்றம் சென்னை மற்றும் மதுரை கிளைகளில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, குறிப்பாக பதவி உயர்வு, சம்பள உயர்வு , பதவி உயர்வில் பணிமூப்பு கடைபிடிக்காதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்படுபவர்கள் தான் வழக்குகளை தொடுக்கின்றனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடுவதனால் தான் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் நீதிமன்றங்களுக்கு செல்கின்றனர். ஆசிரியர்கள், இதர ஊழியர்களுக்கு குறை தீர்ப்பு முகாம் என கடந்த காலங்களில் செயல்படுத்தப்பட்டது.
தற்போது அது முற்றிலுமாக செயல்படாமல் உள்ளது. அப்படியே அந்த முகாம்களை நடத்தினாலும், அதில் முழுவதுமாக தீர்வு காணப்படுவதில்லை. இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் அக்டோபர் 31ஆம் தேதி புதிய இணையதளத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவங்கி வைத்தார்.
மேலும் அலுவலர்கள் அவர்களின் அதிகாரத்திற்குட்பட்ட குறைகளை உடனடியாக தீர்த்து வைப்பார்கள் எனவும், கொள்கையளவில் முடிவு செய்ய வேண்டியது குறித்தும் அரசு ஆலோசனை செய்து அறிவிக்கும் என தெரிவித்திருந்தார். இது குறித்து பள்ளி கல்வித்துறை இயக்குநர் அறிவொளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
அக்கடிதத்தில், "கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குறைதீர் புலம் மூலம், குறைகளை நிவர்த்தி செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் இணைப்பில் கண்டுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்கள் தங்களது பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் (User name & Password) பயன்படுத்தி, குறைகளை உள்ளீடு செய்யும் பொருட்டு அனைத்து ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்களுக்கு இவ்விவரத்தினை தெரிவித்தல் வேண்டும்.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியளர்களின் குறைகளை எவ்வித காலதாமதமின்றி உடனுக்குடன் தீர்வுகாணும் பொருட்டு, அனைத்து அலுவலகங்களில் தொடர்பு அலுவலரை கட்டாயம் நியமனம் செய்தல் வேண்டும். ஒவ்வொரு நாளும் பெறப்படும் விண்ணப்பங்களை அறிக்கையாக தயார் செய்தல் வேண்டும்.
அலுவலர்கள் இணைப்பில் கண்டுள்ளபடி அலுவலர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குறைதீர்ப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இது சார்ந்து மாநில அளவில் பணிகளை மேற்கொள்ள 2 நிருவாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்" என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், பள்ளி கல்வித்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள கடிதத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு எமிஸ் (EMIS) இணையதளத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உள்ள வீடியோகளுக்கான இணைய முகவரியும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க: சென்னை - நெல்லை வந்தே பாரத் சிறப்பு ரயில்..! தென்னக ரயில்வே அறிவிப்பு!