தமிழ்நாட்டில் மீண்டும் கரோனா தொற்று அதிகளவில் பரவிவருகிறது. கடந்த சில நாள்களாக மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
கரோனா தொற்று ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவக்கூடிய வேகம் அதிகரித்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எளிதாக ஒருவரிடமிருந்து 30 பேருக்குப் பரவுகிறது. கூட்டு கரோனா பாதிப்பு பல இடங்களில் கண்டறியப்பட்டுவருகிறது.
எனவே, சுகாதாரத் துறை அலுவலர்கள் கட்டுப்பாட்டு வழிமுறைகளைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தொற்று அதிகரிப்பதால் கரோனா பரிசோதனையின் முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வருவதற்கான பணிகளை மேற்கொள்ளுங்கள். கரோனா பாதிப்பால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்களை, தொடர்ச்சியாகக் கண்காணித்துவாருங்கள்.
ஒருவேளை, கரோனா பாதிப்பு மோசமாவதை உணர்ந்தால், உடனடியாக கோவிட் மையத்திற்கு மாற்றிவிடுங்கள். போதுமான ஆம்புலன்ஸ் சேவை உள்ளதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
கரோனா பாதிப்புக்களானவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களைக் கண்டறியும் பணி 72 மணி நேரத்திற்குள் நிறைவடைய வேண்டும். அரசு, தனியார் மருத்துவமனைகளில் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும், படுக்கை எண்ணிக்கை, வென்ட்டிலேட்டர் எண்ணிக்கையும் அதிகரிக்க வேண்டும்.
கரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்குச் சிகிச்சை அளிப்பதில், எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது. கரோனா பாதிப்பு அதிகரிப்பு, நிச்சயம் கரோனா உயிரிழப்புகளை வரும் காலத்தில் அதிகரிக்கக்கூடும். எனவே, முறையான சிகிச்சை மூலம் உயிரிழப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கரோனா நெறிமுறைகளான முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவற்றை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். சந்தை, மத வழிபாட்டுக் கூடம், நிகழ்ச்சிகள், தேர்தல் பரப்புரை ஆகியவற்றில் கூடுதல் கவனம் தேவை.
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரையுங்கள். கரோனா பரவலைத் தடுத்திட சுகாதாரத் துறையினருடன், காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் ரூ.54 கோடிக்கு கொள்முதல்!