தமிழ் சினிமா எத்தனையோ இயக்குநர்களை கண்டிருக்கிறது. ஆனால், சினிமா உலகில் மறக்க முடியாத இயக்குநர்கள் வரிசையில் இயக்குநர் மகேந்திரன் மிக முக்கியமானவர். அழகப்பா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது எம்.ஜி.ஆர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நிகழ்ச்சியில் மூன்று நிமிடங்கள் பேச அலெக்சாண்டர் என்ற மகேந்திரனுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது.
அப்போது அவர் பேசியது, “நேரில் காதலிக்கும் நாம யாராவது டூயட் பாடுறோமா ஆனால் சினிமாவில் எம்.ஜி.ஆர் காதல் பண்றப்போ டூயட் பாடுறார்”. இதை சாதாரணமாக கேட்கும்போது நகைச்சுவைக்காக சொல்லியிருக்கிறார் என தோன்றலாம். ஆனால், அப்போதே அவர் சினிமாவில் யதார்த்தத்தை தேட ஆரம்பித்திருக்கிறார் என்பதுதான் நாம் இங்கு கவனிக்கப்பட வேண்டியது. இவரது பேச்சைக் கேட்ட எம்ஜிஆர் “வருங்காலத்தில் நல்ல விமர்சகராக வர வாழ்த்துகள்” என்று கூறிவிட்டு செல்கிறார்.
அதன்பிறகு துக்ளக் இதழில் உதவி ஆசிரியராக பணியில் சேர்ந்த மகேந்திரன் உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்துக்கு நேர்மையான விமர்சனத்தை எழுதுகிறார். இது எம்ஜிஆருக்கு சிறிது சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனாலும், எம்ஜிஆராக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி தன் விமர்சனம் உண்மையைத்தான் பேசும் என்ற மனப்பான்மையில் அவர் இருந்தார். நல்ல படைப்பாளிக்கு கர்வம் இருத்தல் அழகு என்றால், நேர்மையான விமர்சகருக்கு கர்வம் இருத்தல் பேரழகு.
எம்ஜிஆருக்கு எத்தனையோ எழுத்தாளர்களுடன் பழக்கமுண்டு, அவர் கண்ணசைத்தால் எழுதி கொட்டி தீர்க்க பலர் தோட்டத்துக்கு வருவார்கள். ஆனால் தமிழ் இலக்கியத்தின் வைரக்கல் பொன்னியின் செல்வனை திரைக்கதையாக்கும் முயற்சியை மகேந்திரனிடம் கொடுக்கிறார் எம்ஜிஆர்.
நான் சினிமாக்காரனாக இருப்பதைவிடவும், பத்திரிகைகாரனாக இருப்பதையே பெரிதும் விரும்பினேன் என கூறியவர். அதனால்தான் அவர் ஒரு நல்ல விமர்சகராக இருந்தார், நல்ல விமர்சகராக இருந்ததால்தான் எதார்த்தத்தைத் தேடினார்.
சிவாஜி கணேசனின் நடிப்பில் உச்சம் தொட்ட படங்கள் ஏராளம் இருப்பினும், அவரது ரசிகர்கள் மனதில் இன்றுவரை மறையாத படம் தங்கப் பதக்கம். அந்தப்படத்தின் கதையாசிரியர், வசனகர்த்தா மகேந்திரன். சிவாஜி நடிகர் திலகம் என்று பலரால் பேசப்பட்டாலும், அவர் மிகையாக நடிப்பார் என்ற விமர்சனமும் வைக்கப்பட்டுத்தான் வந்தது.
ஆனால், தங்கப்பதக்கம் திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா உயிரிழந்து அவரை சிவாஜி பார்க்கும் காட்சியில், செவாலியே மேல் வைக்கப்பட்ட மிகை நடிப்பு விமர்சனத்தை அடித்து சுக்கு நூறாக்கியவர் மகேந்திரன்.
பல திரைப்படங்களுக்கு கதையாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் மகேந்திரன் பணியாற்றினாலும், முதன்முதலாக அவர் 'முள்ளும் மலரும்' திரைப்படத்தை இயக்கினார். 1970களில் தமிழ் சினிமா இண்டோர் விட்டு அவுட்டோர் சென்றாலும் ஏதோ ஒன்று மிஸ் ஆகிக்கொண்டே இருந்தது.
அதனை முள்ளும் மலரும் தீர்த்து வைத்தது. ஆம், அண்ணன் தங்கச்சி கதை பாசமலர் போல் இருக்கும் என எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு மகேந்திரன் நெற்றியில் அடித்துச் சொன்னார், “அண்ணன் என்பவன் எப்போதும் காளி போல்தான் இருப்பான்” என்று.
முள்ளும் மலரும் திரைப்படத்தில் பாலுமகேந்திரா, மகேந்திரன், இளையராஜா, ஷோபா இந்த நால்வரும் சேர்ந்து செய்த மேஜிக்குகள் ஏராளம். 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்' பாடலில் மகேந்திரனின் காட்சியமைப்பு, பாலு மகேந்திராவின் கேமரா, கண்ணதாசனின் வரிகள் ஆகியவை இன்றுவரை எந்த கூட்டணியாலும் உடைக்க முடியாதது.
அதே திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், ஷோபா சரத்பாபுவை திருமணம் செய்துகொண்டு ஊர்க்காரர்கள் புடை சூழ வந்துகொண்டிருப்பார். அப்போது ரஜினி அவர்களைப் பார்க்கும்போது ஒரு மௌனம் திரையில் நிகழும். அந்த மௌனத்தை இப்போது யூ ட்யூப்பில் பார்த்தாலும், திரையில் இருப்பவர்களின் மனதுக்குள் இருக்கும் பதற்றத்தை ரசிகர்களுக்கு கடத்தும். ஆம், மகேந்திரன் மௌனத்தை மொழியாக்கியவர்.
முள்ளும் மலரும் இப்படி என்றால் உதிரிப்பூக்கள் அவரின் அடுத்த பாய்ச்சல். நடிகர்களை மையமாக வைத்து திரைப்படங்கள் எடுத்த காலக்கட்டத்தில் நடிகையை மையமாக வைத்து, ஆண்களை போற்றிப் பாடிய தமிழ் சினிமாவில், ஆணுக்குள் இருக்கும் பெண் குறித்த வன்மத்தை அப்பட்டமாகப் பேசிய படம் அது.
படத்தின் பல காட்சிகள் பல உணர்வுகளைக் கொடுக்கக் கூடியது. அதில் ஒரு காட்சியில், சரத்பாபு ஆற்றங்கரையில் இருக்கும் விஜயனிடம் சமாதானம் பேச வருவார். அடுத்த காட்சியில் சரத்பாபு ரத்தக்காயப்பட்டிருக்கும் தனது உதட்டை ஆற்று நீரால் கழுவிவிட்டு 'உங்கள நான் அடிக்க ரொம்ப நேரம் ஆகாது. ஆனா லட்சுமி விதவையாகிடக் கூடாதுன்னுதான் அடிக்காமப் போறேன்' என்பார்.
இந்த ஒரு காட்சி போதும் இதற்கு முன் இருவருக்கும் இடையே என்ன நடந்திருக்கும் என்பதை ரசிகர்களும் யூகித்திருப்பார்கள். ஒரு நல்ல படைப்பாளி என்பவர் ரசிகனுக்கு தான் சமைத்ததை பரிமாற மட்டும் கூடாது. ரசிகனை சிந்திக்க வைக்க வேண்டும். அந்தவகையில் மகேந்திரன் எப்போதும் முதன்மையானவர்.
மனித மனம் ஒரு குரங்கு என்ற கூற்று பல காலமாக உண்டு. ஒரு பொருளைவிட்டு மற்றொரு பொருள் மீது தாவுவது இயல்பு. அதனை “ஜானி” திரைப்படத்தின் ஒரு காட்சியில் மிக லாவகமாகக் கையாண்டிருப்பார் மகேந்திரன். சிகை அலங்காரம் செய்யும் ரஜினிகாந்த் தனது வீட்டில் இருக்கும் “பாமா”-வை துணி எடுக்க கடைக்கு அழைத்துச் செல்வார். அப்போது, மாறி மாறி துணி எடுத்து கொண்டிருக்கும் பாமா கதாபாத்திரம், ஒரு பொம்மை கட்டியிருக்கும் புடவையை பார்த்து நிற்கும். அதனைக் கண்ட ரஜினிகாந்த் இப்படி பேசியிருப்பார், “இந்த உலகத்தில் ஒன்றை விட ஒன்று நல்லாதான் இருக்கும் அதுக்காக நம்ம மனச மாத்திட்டே இருக்கக் கூடாது”. பிற்பாதியில் ரஜினியை விட்டு பாமா செல்லப்போகிறார் என்பதற்கான குறியீட்டு வசனம் என்றுகூட இதை சொல்லலாம்.
இப்படி மகேந்திரனின் சினிமாக்களையும், அதில் உள்ள காட்சிகளையும், அவர் எழுதிய வசனங்களையும், அவர் பேசிய மெல்லிய உணர்வுகளையும் சொல்லிக்கொண்டே போகலாம். எப்போதும் இந்த உலகத்தில் மௌனம்தான் பெரும் சத்தம். பக்கம் பக்கமாய் காதல் கவிதைகள் எழுதுவதைவிட 5 நிமிடப் பாடலில் ஒரு இசைத் துணுக்கோ, இல்லை பாடலுக்கு இடையே வரும் மௌனமோ, இல்லை எதார்த்த வரிகளோ நம்மை ஆட்டுவிக்கும். பதை பதைக்க வைக்கும். அப்படிப்பட்ட மௌனங்களையும், மெல்லிய உணர்வையும், எதார்த்தங்களையும் கொடுத்தவர் மகேந்திரன்.
தமிழ் ஈழத்தில் இருப்பவர்களுக்கு சினிமா மீது ஆர்வம் இருப்பதாலும், அவர்களது வாழ்க்கை முறை குறித்து சினிமா எடுக்க வேண்டும் எனவும் விடுதலைப் புலிகள் விரும்பியபோது அவர்களது ஒரே தேர்வாக இருந்தது இயக்குநர் மகேந்திரன் மட்டும்தான். அதன்பிறகு அவர் ஈழம் சென்று திரைப்படம் எடுத்துக் கொடுத்தும், திரைப்படம் குறித்து பயிற்சியும் கொடுத்துவிட்டு வந்தார். மேலும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துவிட்டு வந்தார். வாழ்வியல் முறைப்படி திரைப்படம் எடுக்க எதார்த்த எண்ணம் வேண்டும் அது மகேந்திரனால் மட்டும்தான் சாத்தியம் என்பதை ஈழமும், பிரபாகரனும் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது இங்கு பலரால் நினைவுகூரப்படுகிறது.
ஆனால் அந்த மகா கலைஞனை இந்த தமிழ் சினிமா கொண்டாடத் தவறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 'இல்லை... இல்லை...' என்று வாதிடுபவர்களிடம், ஒரு உதிரிப்பூக்கள் பட கேசட்டையோ, மெட்டி திரைப்படத்தின் கேசட்டையோ வாங்கிவிட முடியுமா என்ற கேள்வி கேட்டால், மகேந்திரன் கொடுத்த எதார்த்த மௌனம் அவர்களில் குடியேறும் என்பது எதார்த்த உண்மை.
தனது சினிமா வாழ்க்கை குறித்து மகேந்திரன் இப்படி பேசுகிறார், “சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் அனைவருமே ஆசை, விருப்பம், லட்சியம், போராட்டம் ஆகியவற்றைக் கடந்து, வெற்றி பெறுவார்கள். அது அவர்களுக்குக் காதல் திருமணம் போன்றது. ஆனால், நான் சினிமாவை வெறுத்தவன். என்றுமே சினிமா எனக்குக் காதல் திருமணமாக இருக்கவில்லை. கட்டாயத் திருமணமாகத்தான் இருந்துள்ளது. ஓடிச் சென்றவனை விடாமல் பிடித்துக் கொண்டதற்காக, சினிமாவுக்கு மரியாதை கொடுக்கிறேன். ஆனால், அந்த சினிமாவை இதுவரை அன்போடு நெருங்கவில்லை”.
மகேந்திரன் இப்படி கூறியதற்கு காரணம் மகேந்திரன் இல்லை, சினிமா. ஏனெனில் அவர் எதிர்பார்த்த, எடுக்க நினைத்த சினிமா வேறு, மகேந்திரனுக்கு சினிமா கொடுத்தது வேறு. தமிழ் சினிமா எனும் முள்ளின் மேல் வலுக்கட்டாயமாக தனக்கு பிடிக்காமல் மலர்ந்திருந்தாலும், தான் மலர்ந்திருந்த காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் எதார்த்தத்தை ஊற செய்த உன்னதமான சூழல் அவர்.
இப்போது உலக சினிமா குறித்து பலர் பேசி கொண்டிருக்கலாம் ஆனால் எதையும் பேசாமல் உலக சினிமாக்களை கொடுத்துவிட்டு போயிருக்கிறார்.