இது குறித்து இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளருமான வ. கௌதமன் வெளியிட்டுள்ள காணொலியில், ”கரோனா பாதிப்பால் ஈவு இரக்கமில்லாமல் கொத்துக் கொத்தாக மனித உயிர்களை வேட்டையாடிக் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் மத்திய அரசு அதனை மட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை கையிலெடுக்காமல் இடைவிடாது தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளையே குறிவைத்து பறித்துக் கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதனைத் தமிழ்நாடு அரசும் கைகட்டி வேடிக்கைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல், தமிழர்களை வதைக்க தன் பங்குக்கு எப்படியாவது டாஸ்மாக்கை திறந்துவிட துடித்துக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.
இந்நேரத்தில் இதுதான் தோதான நேரமென்று கருதி நடிகர் ரஜினி, தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்திட ஆடும் அமெச்சூர் நாடகம்தான் அதனையும் தாண்டிய பெரும் வேதனை. தமிழ்நாட்டில் அதிமுகவாக இருந்தாலும், ஆண்ட திமுகவாக இருந்தாலும் இனி தமிழ்நாட்டை ஆளத்துடிக்கிற எவராக இருந்தாலும் சரி, மதுவை மீண்டும் விற்க முன்வந்தால் மிகக் கடுமையான எதிர்விளைவினை சந்திக்க நேரிடும் என்பது அனைவரும் அறிந்தது.
ரஜினி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது வரவேற்கப்படவேண்டியதுதான் என்றாலும், அதிலுள்ள நுணுக்கமான அரசியல் அபாயகரமானது. தமிழ்நாட்டின் அமைச்சர்களே மத்திய அரசின் வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் மதுக்கடைகளைத் திறந்தோம் என்கின்றனர். ஆனால், மத்திய அரசுக்கு நெருக்கமானவராகவும் பிரதமர் மோடியின் நண்பராகவும் இருக்கக்கூடிய ரஜினி இதுவரை மத்திய அரசிடம் ஏன் தனது அதிருப்தியை தெரிவிக்கவில்லை?
அனைத்து மாநிலங்களும் கடுமையான ஊரடங்கில் இருக்கும் சூழலில் மத்திய அமைச்சர் ஜவடேகர் மாநில அரசுகள் மதுக்கடைகளைத் திறக்கலாம் எனப் பிரகடனப்படுத்தியபோது தமிழ்நாடு அரசை எச்சரித்ததைப் போலவே வருகின்ற தேர்தலில் பாஜகவிற்கும் மாபெரும் பின்னடைவினை ஏற்படுத்தும் என்று ஏன் எச்சரிக்கவில்லை?
ஆளும் பாஜக அரசு நீட் உள்பட தமிழ்நாட்டின் கல்வி உரிமை, காவேரி உரிமை பறிப்பை தொடர்ந்து இப்போது மின்சாரத்திலும் கை வைத்திருக்கிறது. இவையனைத்தும் தனது "ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கம்" தந்த தமிழினத்திற்குத்தான் பெரும் பாதிப்பினை உருவாக்கும் என ரஜினிக்குத் தெரியாதா என்ன? இங்கு எவரும் சரியில்லை இனி நான்தான் என இவரை இயக்கும் பிக்பாஸ்களால் பேசவைக்கப்பட்டிருக்கிறார்.
எங்களை நிரந்தரமாக ஒடுக்க நினைப்பவர்களால் ரஜினி முதன்மையானவராகக் காட்டப்பட்டுவருகின்ற தேர்தலுக்குள்ளாகத் தயார்படுத்தப்படுகிறார் என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தருவேன் என்று தனது படங்களின் மூலம் சபதமெடுத்த ரஜினி, தொடர்ந்து தமிழர்கள் மீதும், தமிழ் மொழி, தமிழ்நாட்டின் உரிமைகள் மீதும் மத்திய அரசு அதிகாரப் போர் தொடுப்பதை ஒருமுறையாவது கண்டித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு அறிவுரை சொல்லட்டும்.
திரையில் நடித்த தாங்கள் தரையிலும் நடிப்பது ஒருபோதும் எடுபடாது என்பதை இனியாவது புரிந்துகொள்ள வேண்டும். அதேபோன்று மத்திய அரசின் வலிந்த அத்துமீறல்களை இங்கு ஆளும் அதிமுக அரசோ அல்லது மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவோ ஒருபோதும் வேடிக்கை பார்க்கக் கூடாது.
ஒருவேளை எல்லாம் பொய்த்துப்போனால் ஜல்லிக்கட்டுக்காகத் திமிறி எழுந்த எங்கள் அறம்மிக்க பெருங்கூட்டம் ஒருபோதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்பதை தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஹாக்கி ஜாம்பவான் பல்பிர் சிங் கவலைக்கிடம்