இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் புதிய முதலைச்சராக பொறுப்பேற்க இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் களம் கண்ட முதல் தேர்தலிலேயே வியத்தகு வித்தியாசத்தில் வாக்குகளை வாங்கி பெரும் வெற்றி பெற்றிருக்கும் எங்கள் கலைக் குடும்பத்தை சேர்ந்த படத் தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கும் என் இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
சுமார் 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் சட்டப்பேரவை உறுப்பினராக மேயராக துணை முதலமைச்சராக என்று பல நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று திறம்பட நடத்தி அனுபவங்களை சேகரித்து இன்று முதலமைச்சராக பொறுப்பேற்க இருக்கும் மு.க. ஸ்டாலினின் வெற்றி வரலாற்று சாதனை என்றால் அது மிகையாகாது.
முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் புதல்வன் என்பதைவிட ஸ்டாலினின் தந்தை கலைஞர் என்று சொல்லத் தகுந்த அளவுக்கு மிகுந்த சாதுரியத்துடன் அரசியல் சதுரங்கத்தில் காய் நகர்த்தி வெற்றிக்கனியை பறித்திருக்கிறார். அவருடைய அனுபவ அறிவும் தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும் என்கிற கனவும் நிச்சயமாக நமக்கெல்லாம் ஒரு பொற்கால ஆட்சியாக அமையுமென்று நம்புகிறேன். உதயநிதி ஸ்டாலின் நடிகராக மக்கள் இதயங்களை வென்றெடுத்த இளைஞர்.
இனி அரசியலிலும் தனது துணிச்சலான புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் நல்ல அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்று நம்புகிறேன். திரைத்துறையிலும் கோலோச்சிய கலைஞர் பல நன்மைகளை திரைத்துறைக்கு செய்து இருக்கிறார். அதேபோல புதிதாக அமையவிருக்கும் திமுக ஆட்சியில், உதயசூரியன் வரவால் தமிழ் திரையுலகில் படர்ந்திருக்கும் பல சோதனையான வேதனையான இருள் விலகி புத்தொளி பிறக்கும் என்று நம்புகிறேன்.ஏராளமான எதிர்பார்ப்புகளுடன் வாக்களித்திருக்கும் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களை வெல்லும் ஒரு நிறைவான நிலையான மகிழ்வான ஆட்சி நடத்த வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.