சென்னை: கபிலன் வைரமுத்து எழுத்தில் உருவாகி, இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட 'ஆகோள்' என்ற நாவலின் அறிமுக விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய கபிலன் வைரமுத்து, "1920ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி, உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கையாக்கி இருக்கிறேன்.
அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன். பெருங்காம நல்லூர் கலவரத்தை மட்டுமே ஒரு நாவலாக எழுதியிருந்தால் இது ஒரு குறுகிய வட்டத்தில் ஆவணமாக முடிந்திருக்கும். அந்த கலவரம் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சொல்லும் செய்தி என்ன என்ற அளவில் இதை எழுதியிருப்பதால், இது ஆவணம் என்ற நிலையைத் தாண்டி ஒரு புதிய ஆரம்பமாக இருக்கிறது.
இது இளைஞர்களுக்கான இலக்கியம். நம் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வளரும் துறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் டேட்டா என்ற பெருந்தரவு தொழில்நுட்பம் குறித்துவிரிவாக எழுதியிருக்கிறேன். கை ரேகை சட்டம் ஒழிந்தும், கை ரேகை அரசியல் ஒழியவில்லை என்பதை இந்த நாவல் வழி சொல்லியிருக்கிறேன். ஆகோள் வெறும் புத்தகமல்ல, விழிப்புணர்வு இயக்கம்” என தெரிவித்தார்.
விழாவில் சொல்வேந்தர் கம்பம் பெ. செல்வேந்திரன் நூலைப் பற்றிய அறிமுக உரையைநிகழ்த்தினார். மருத்துவர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக இருநூறு மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பெற்று அவர்களுக்கு ஆகோள் புத்தகம்வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழ்நாடு சட்டப்பேரவையில் வரம்பை மீறினாரா ஆளுநர்..? - சட்ட வல்லுநரின் கருத்து