சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 16ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 2023 - 2024ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர்வதற்கு 2 ஆயிரத்து 993 மாணவர்கள் விண்ணப்பம் செய்ததில், 2 ஆயிரத்து 92 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிப்பில் 473 இடங்களும், பிடிஎஸ் படிப்பில் 133 இடங்களும் நிரப்பப்பட உள்ளது. அதேபோல் விளையாட்டு ஒதுக்கீட்டு பிரிவிற்கு 179 மாணவர்களும், முன்னாள் படை வீரர் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 41 மாணவர்களும், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டு பிரிவிற்கு 98 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டில் சேர்வதற்கான கலந்தாய்வு 27ஆம் தேதி கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மூன்று கட்டங்களாக இந்த கலந்தாய்வுக்கு மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தரவரிசை எண் 1 முதல் 1398 வரை இடம் பெற்றுள்ள மாணவர்களும், நீட் தேர்வு மதிப்பெண் 569 முதல் 285 வரை பெற்ற மாணவர்களும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கலந்தாய்விற்காக அழைப்புக் கடிதம் மாணவர்களுக்கு தனியாக அனுப்பப்படாது எனவும், அரசுப் பள்ளி மாணவர்கள் கலந்தாய்வுக்காக எந்த வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக மாணவர்கள் கலந்தாய்வு நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும்.
கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் நீட் 2023 தேர்வு நுழைவுச் சீட்டு மற்றும் மதிப்பெண் சான்றிதழ், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 11ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான மாவட்ட முதன்மை கல்வி அலுவலரால் அளிக்கப்பட்ட சான்றிதழ், மாணவரின் மாற்றுச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், தாய் அல்லது தந்தையின் சாதிச் சான்றிதழ் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும் இடம் ஒதுக்கப்படும் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் கிடையாது எனவும், கலந்தாய்வு அட்டவணையில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அப்போது உள்ள காலி இடங்களின் அடிப்படையில்தான் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கூறியுள்ளனர். கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் செல்போன் உள்ளிட்ட எந்த வித தகவல் தொடர்பு சாதனங்களும் அனுமதிக்கப்படாது எனவும் கூறியுள்ளனர்.
அதே போன்று, ஜூலை 27ஆம் தேதி விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு நேரடி கலந்தாய்வு நடைபெறுகிறது எனவும், விளையாட்டு வீரர் பிரிவில் தரவரிசைப் பட்டியல் 1 முதல் 25 வரை பெற்ற மாணவர்களுக்கு காலை 8 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் எனவும், அதேபோல் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு காலை 8.30 மணிக்கு தர வரிசை 1 முதல் 25 வரை பெற்ற மாணவர்களுக்கும், காலை 9 மணி முதல் மாற்றுத்திறனாளி ப்பிரிவினருக்கும் கலந்தாய்வு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு; பதிவு, முன்னுரிமை பட்டியல் தயாரிப்பது எப்படி?