இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நினைத்தாலே நெஞ்சை பதற வைக்கும் வகையில், தூத்துக்குடியில் கொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள போதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
நச்சு பரப்பும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாக போராடிய 13 பேரை வெறிப்பிடித்த மிருகங்களாக மாறி தலை, நெற்றி, வாய், கழுத்து, மார்பு, வயிறு ஆகிய இடங்களில் குறிவைத்து குண்டுகளைப் பாய்ச்சி கொன்று குவித்தனர். இப்படி 13 பேரையுமே மிகக் கொடூரமான முறையில்தான் பழனிச்சாமியின் காவல்துறை சுட்டு வீழ்த்தியது. அத்தனை பெரிய பயங்கரம் நடந்த பிறகும், முதலமைச்சரான பழனிச்சாமி தூத்துக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை.
உகாண்டாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் யாராவது இறந்தால் கூட உடனே டிவிட்டரில் இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, சொந்த நாட்டின் தூத்துக்குடியில் நடந்ததற்கும் தமக்கும் தொடர்பே இல்லாதது போல இருந்துவிட்டார். ‘ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்படக்கூடாது’ என்ற கொள்கை முடிவை தமிழக அமைச்சரவையில் வைத்து உடனடியாக எடுக்க வேண்டும். கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச்சின்னம் அமைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.