மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாயும், கடும் ஊனமுற்றோருக்கு 5 ஆயிரம் ரூபாயும் மாத உதவித்தொகையாக வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டப்படி குறைந்தபட்சம் தனியார்துறை பணிகளில் 5 விழுக்காட்டை ஒதுக்க வேண்டும். 2013 உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அரசுத்துறைகளில் வழங்க வேண்டிய சட்டப்படியான 4 விழுக்காடுப் பணியிடங்களை நிரப்பியது குறித்த அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 9ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் சுமார் 200 அரசு அலுவலகங்களில் மாற்றுத்திறனாளிகள் குடியேறி காத்திருக்கும் போராட்டத்தை நடத்தினர்.
அப்போது அச்சங்கங்களின் தலைவர்களுடன் சமூக நலத்துறைச் செயலாளர் மதுமதி பேச்சுவார்த்தை நடத்தினார். அனைத்து கோரிக்கைகளையும் அரசின் கவனத்திற்குக்கொண்டு சென்று ஒரு வார காலத்தில் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். இதனால் 10ஆம் தேதி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் ஆணையரகத்தில் குடியேறிய மாற்றுத்திறனாளிகள் தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கிய இன்று(பிப்.23) 100 அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தை நடத்தினர்.
அந்த வகையில், சென்னை மாவட்டக் குழுவின் சார்பில் காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தில் மாநிலத் தலைவர் ஜான்சிராணி, பொதுச் செயலாளர் நம்புராஜன் உள்ளிட்டோர் தலைமையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் ஆணையரக வளாகத்தில் அடுப்பில் சமையல் செய்து வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
உதவித்தொகையை உயர்த்தக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்!