சென்னை: தமிழக அரசின் மக்கள் ஐடிக்கும் ஆதார் அட்டைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தமிழக அரசின் மக்கள் ஐடி என்றால் என்ன? : தமிழ்நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் பன்னிரெண்டு இலக்க எண்ணுடன், மக்கள் ஐடி என்ற அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதற்கென தனியாக அடையாள அட்டை வழங்கப்படாது. ஆனால், ஒவ்வொருவருக்கும் அடையாள 12 இலக்க எண்ணை அரசு ஒதுக்கி பராமரிக்கும்.
மக்கள் ஐடியின் நோக்கம்: இதன் மூலம் ஒரு தரவு சார்ந்த உட்கட்டமைப்பை உருவாக்கி குடிமக்களுக்கு அரசின் திட்டங்கள் எளிய முறையிலும், வெளிப்படையான தன்மையுடனும் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்ய முடியும். நலத்திட்டங்களில் தகுதியான பயனாளிகளை முறையாக அடையாளம் காணுவதற்கு மக்கள் ஐடி திட்டம் பெரிதும் உதவுவதோடு, தரவுகள் துறைகளுக்கு திட்டமிட மிகுந்த பயனுள்ளதாக அமையும்.
12 இலக்க எண்ணுடைய மக்கள் ஐடி: தமிழ்நாடு அரசின் ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு திட்டத்திற்கும் தனித்தனியே மென்பொருள் மற்றும் அதற்கான தரவுகள் உள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள தரவுகள் அனைத்தையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து திட்டங்கள் தயாரித்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் நோக்கத்துடன் மாநில குடும்ப தரவு தளத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் குடிமக்கள் பெறும் அனைத்து நலத்திட்டங்களும் பல்வேறு துறைகளில் தரவுகளை ஒப்பிட்டு ஒருங்கிணைக்கப்பட்டு, ஒவ்வொரு திட்டத்திற்கும் தகுதியான குடிமக்களை தரவு பகுப்பாய்வு மென்பொருள் மூலமாக எளிதில் அடையாளம் காணலாம். மேலும் இதில் 12 இலக்க எண் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளுக்கு இடையிலான தொடர்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் தரவுகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டுவதும், நடைமுறைப்படுத்துவதும், தகுதி உள்ள பயனாளிகளுக்குத் திட்டங்களின் பயன் கிடைக்கவில்லை என்ற குறைபாட்டையும், தகுதி இல்லாத நபர்களுக்கு திட்டங்கள் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டையும் இது நிவர்த்தி செய்யும்.
மக்கள் ஐடியில் என்ன உள்ளது?
* அடையாள அட்டை போன்று எதுவும் வழங்கப்படாது. அடையாள எண் மட்டுமே உருவாக்கப்படும்.
* இரு துறைகளுக்கு இடையேயான தேவை மற்றும் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
* கைரேகை, கருவிழி போன்ற பயோ மெட்ரிக் பதிவு செய்யப்படாது.
* தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலம் நலத்திட்ட உதவிகளை பெற்று வரும் பயனர்களைக் கண்டறிந்து, அது தொடர்பான தரவுகள் மக்கள் ஐடியுடன் இணைக்கப்படும்.
* இரு துறைகளுக்கு இடையே தரவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக பயன்படுத்தப்படும்.
* மக்கள் ஐடி சேவையை தனிநபர் கணினி மூலம் லாக் - இன் செய்து பெற முடியாது.
ஆதார் அட்டையில் என்ன உள்ளது?:
* அனைத்து மக்களுக்கும் ஆதார் எண்ணுடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
* அரசுத் திட்டங்கள், வங்கி பயன்பாடு போன்றவற்றுக்கு அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும்.
* ஆதார் அட்டைக்கு பயோமெட்ரிக் பதிவிலான கை ரேகை, கருவிழி ஆகியவை பதிவு செய்யப்படும், புகைப்படம் தேவைப்படும்.
* ஆதார் அட்டை சில சேவைகளுடன் இணைக்கப்படும்.
* ஆதார் எண் சேவையை தனிநபர் கணினி மூலம் லாக் - இன் செய்து பெற முடியும்.
* பொதுமக்கள் அலையாமல் அரசு திட்டங்களுக்கு மக்கள் ஐடியைப் பயன்படுத்த முடியும்
ஆதார் அட்டை கட்டாயம் என்றும், அதனை எடுக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் ஆரம்ப காலகட்டத்தில், பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்களில் குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால் பொதுமக்கள் பலரும் இன்னலுக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் மக்கள் ஐடியை வழங்குவதற்கு, சிறப்பு முகாம்கள் அனைத்து இடங்களிலும் அமைத்து, பொதுமக்களுக்கு நேர விரயம் இல்லாமல் உடனடியாக வழங்கும் படி நடவடிக்கையை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க: தருமபுரி: சாலையில் உலா வரும் யானைகளால் மக்கள் அச்சம்!