சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம், வாத்தி. டோலிவுட் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை சித்தாரா எண்டர்டெயின்ட்மென்ட்ஸ், ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் மற்றும் ஸ்ரீகாரா ஸ்டூடியோஸ் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் சம்யுக்தா, சமுத்திரக்கனி மற்றும் கென் கருணாஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இப்படம் இன்று (பிப்.17) தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியது.
தமிழ் மொழியைத் தாண்டி பாலிவுட் மற்றும் ஹாலிவுட் வரை சென்றுள்ள தனுஷ், வாத்தி(vaathi) திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக டோலிவுட் கதவை திறந்துள்ளார். ஏற்கனவே தனுஷ் பாடிய பல பாடல்கள் உலகம் முழுவதும் புகழ் பெற்று வரும் நிலையில், தெலுங்கு திரைப்பட சந்தையிலும் தனுஷ் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக தனுஷின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. எனவே கல்வி அரசியலை மையமாக வைத்து கமர்ஷியல் மசாலா தூவி தயார் செய்யப்பட்ட வாத்தி திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதனிடையே இன்று வெளியான இப்படத்தை காண காலை முதலே ரசிகர்கள் திரையரங்கு வாயிலில் திரண்டு, வெடி வெடித்தும் மேளம் அடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேநேரம் ‘வாத்தி’ என்ற தலைப்புக்கு பல்வேறு ஆசிரியர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தனுஷ் தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இந்த படத்தில் நடித்துள்ள சம்யுக்தா, சமீபத்தில் தனது பெயரில் இருந்த சாதிய அடையாளத்தை நீக்கியதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நடிகை அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்