சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 23ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இந்தப் போட்டியில் பங்கேற்க 11 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் 400மீ தொடர் ஓட்டப் பந்தயத்தில் தேர்வான நாகநாதன் பாண்டி, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வருகிறார்.
யார் இந்த நாகநாதன் பாண்டி?
ராமநாதபுர மாவட்டம், சிங்கபுலியப்பட்டி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எளிய பின்னணி கொண்டவர் நாகநாதன் பாண்டி. இவர் அனைத்து இந்திய காவல் துறை விளையாட்டு போட்டியில் நடத்திய 4*400 மீ தொடர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்தார். மாநில அளவில் 46.61 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.
- கிரன்பிக்ஸ் (Granfix) போட்டி- தங்கப் பதக்கம் (47.00 நொடிகள்)
- ஃபெடரேஷன் (Federation) கோப்பை - வெள்ளி பதக்கம் (46.09 நொடிகள்)
- தமிழ்நாடு முதலமைச்சர் தடகள போட்டி- தங்கப் பதக்கம் (47.00 நொடிகள்) என அடுத்தடுத்து மாநில அளவில் வெற்றியை ருசித்த நாகநாதன் தற்போது, சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ஓட தேர்வாகியுள்ளார்.
டிஜிபி சைலேந்திரபாபு வாழ்த்து
பணி சுமைக்கு நடுவிலும், தன்னை ஒரு தடகள வீரராக பண்படுத்திக் கொண்டு ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகிவரும் பாண்டியை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், அவரது பெற்றோரை நேரில் சந்தித்து தமிழ்நாடு காவல் துறைத் தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு வாழ்த்துகளை தெரிவித்தார். காவல் துறையின் சார்பில் சிறப்பு உதவிகளையும் அவர் வழங்கினார்.
சுமார் 41 வருடங்களுக்கு பின்னர் தமிழ்நாடு காவல் துறையில் இருந்து தடகள வீரர் ஒருவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளார். கடந்த 1980ஆம் ஆண்டு உதவி ஆய்வாளர் சுப்ரமணியன் மாஸ்கோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஒலிம்பிக்கில் சிங்கபுலியாபட்டி சிங்கம்: குவியும் பாராட்டு!