சென்னை : கடந்த மாதம் 5ஆம் தேதி தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் அடிப்படையில் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு, சென்னை தவிர அனைத்து மாவட்ட காவல்துறை உயர் அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், “அரசாணைப்படி கரோனா காலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், தவறான செய்தியை பரப்பியவர்கள், காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தவர்கள், இ-பாஸை முறைகேடாக பெறுதல் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இதில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக போடப்பட்ட வழக்குகளில், முறைகேடாக இ-பாஸ் பெறுதல், காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட வழக்குகளைத் தவிர, மீதம் போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி கரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறியவர்கள், தவறான செய்தியை பரப்பியவர்கள் எனப் பதிவு செய்யப்பட்ட சுமார் 8 லட்சத்து 98 ஆயிரத்து 948 வழக்குகள் பொதுமக்களின் நலன் கருதி கைவிடப்படுவதாக' டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் சுமார் 15 லட்சம் பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் கைவிடப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திர பாபுவின் முக்கிய அறிவுரை