தமிழ்நாடு தீயணைப்புத் துறை டிஜிபி காந்திராஜனுக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா மற்றும் சிறப்பு கவாத்து அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநரும், சட்டம் ஒழுங்கு டிஜிபியுமான திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
2017ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வுபெற்ற காந்திராஜன், மாநில மனித உரிமை ஆணைய டிஜிபியாக பணியாற்றினார். தற்போது தமிழ்நாடு தீயணைப்புத் துறை டிஜிபியாகவும் பதவி வகித்து வந்த நிலையில், காந்திராஜன் இன்றுடன் ஓய்வுபெற்றார். சமீபத்தில் திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்கும் பணியில் முக்கிய பங்காற்றியவர்களில் காந்திராஜனும் ஒருவர்.
இந்நிகழ்ச்சியில் டிஜிபி திரிபாதி பேசுகையில், "என்னுடைய பேட்ச் அலுவலர் காந்திராஜன், திருவள்ளூரை மாவட்டத்தை சேர்ந்த இவரது குடும்பத்தினர் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள். திறமையான அரசு அலுவலர்" எனப் புகழ்ந்து பேசினார்.
இதையடுத்து சென்னை காவல்துறை கமிஷனர் விஸ்வநாதன் பேசுகையில், "34 ஆண்டுகளாக சிறந்த பணி செய்தவர். தனக்கென முத்திரை பதித்தவர். வீரப்பனை பிடிக்கும் படையில் இருந்தவர். 1985ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்தார். வீரதீரசெயல் விருது, மெச்சத்தக்க பணிக்கான விருது பெற்றவர்" என்றார்.
ஓய்வு பெற்ற காந்திராஜன் பேசுகையில், "1985ஆம் ஆண்டில் காவல்துறையில் சேர்ந்தேன். 34 ஆண்டுகள் என் அதிகாரப்பூர்வ இல்லம் காவல்துறை. என்னுடன் பணியாற்றியவர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். சுறுசுறுப்புடன் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. ஐபிஎஸ் அலுவலர்களை சுதந்திரமாக செயல்பட வைப்பவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தீயணைப்புத் துறைக்கு ரூ. 450 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். காவல்துறைக்கு பல்வேறு சவால்கள் இருக்கிறது.
மனநிறைவோடு ஓய்வு பெறுகிறேன். சட்டத்தின் ஆட்சி ஒரு கண், மனித நேயத்தோடு பணியாற்றுவது இன்னொரு கண். குழந்தை சுஜித் மீட்பு பணியின்போது முதல்வரின் கருணை உள்ளத்தை அறிந்தேன். 4ஆவது காவல் ஆணையம் அமைத்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்று பேசினார்.
மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபி காந்திராஜன் இந்த மாதத்துடன் ஓய்வு பெறுவதையொட்டி, இருப்புப்பாதை காவல்பிரிவு டி.ஜி.பி சைலேந்திரபாபு, தீயணைப்பு, மீட்புப் பிரிவையும் கூடுதலாக கவனிப்பார் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'உடல் உறுப்புகளை விற்க அனுமதி தேவை' - ஆந்திர இளைஞர் தந்த அதிர்ச்சி!