தமிழ் கடவுள் முருகப் பெருமானின் முக்கிய விழாவாக கொண்டாடப்படுவது ஆடி கிருத்திகை திருவிழா, ஆடிக் கிருத்திகை திருவிழாவையொட்டி அனைத்து முருகன் கோயில்களுக்கும் பக்தர்கள் காவடி எடுத்து வந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டுச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழ்நாடு அரசு மக்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்டறிந்து தடை விதிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளன.
ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் பல்லாயிரக்கணக்கில் கூடுவார்கள் என்பதால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம், குமரக்கோட்டம் முருகன் கோயில், வல்லக்கோட்டை முருகன் கோயில், குன்றத்தூர் முருகன் கோயில் இளையனார் வேலூர் முருகன் கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் ஆடிக் கிருத்திகை விழாவையொட்டி வழிபாட்டு நடைமுறையை மாற்ற முடியாத பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக் கடனை செலுத்த முடியாத வேதனையில், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் வாசலுக்கு வந்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி, கோபுரத்தை தரிசித்து வணங்கி விட்டுச் செல்கின்றனர்.
மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் வெளி மாநிலம், வெளி மாவட்ட பக்தர்கள் வேதனையுடன் கோயில் கோபுரத்தை தரிசித்துவிட்டு திரும்பிச் செல்கின்றனர்.