சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான்சாகிப் தெருவைச் சேர்ந்தவர் ப்ரியா. இவர் தனது மாமியாருடன் வெளியில் சென்று விட்டு அண்ணாசாலை வழியாக ஆட்டோவில் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது கையில் வைத்திருந்த நகைபையை தவறவிட்டுள்ளனர். வீட்டிற்கு வந்து பார்த்தபோது கையில் வைத்திருந்த நகைபை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து அண்ணாசாலை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆட்டோவில் வந்த இருவர் நகைப் பையை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆட்டோ செல்லும் வழியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது கொத்தவால்சாவடிப் பகுதிக்கு ஆட்டோ செல்வது பதிவாகியதையடுத்து அந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்த தனிப்படையினர் கேமராவில் பதிவாகியிருந்த ஆட்டோ டிரைவரின் அடையாளத்தை வைத்து விவரங்களை கேட்டறிந்தனர்.
அதில் அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் பார்த்தசாரதி மற்றும் கலைச்செல்வன் என்பது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் நகைப் பையை எடுத்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவரிடம் இருந்த 19 சவரன் நகையை தனிப்படையினர் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.