சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூரில் இருந்து தாம்பரம் வரை அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் புனித தோமையார் மலை துணை ஆணையர் பிரபாகரன் மூன்று வேளை உணவு அளித்துவருகிறார்.
இந்நிலையில் சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில் அமைந்திருக்கும் சீரடி சாய் கருணை இல்லதிற்கும் இன்று உணவு வழங்கினார். இங்கு, 50க்கும் மேற்பட்ட முதியோர் தங்கியுள்ளனர்.
கரோனா காரணமாக ஏற்பட்ட நெருக்கடியில் இந்த ஆதரவற்றோர் இல்லத்தில் இருக்கும் முதியோர்கள் போதிய உணவு கிடைக்காமல் தவித்துவந்தனர். இதையறிந்த துணை ஆணையர் பிரபாகரன் சீரடி சாய் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சுமார் நான்கு மாதங்களாக உதவிவருகிறார்.
அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மளிகை பொருள்களைத் தொடர்ந்து வழங்கிவருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஆகஸ்ட் 23) முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்த முதியோருக்கு காலை உணவை துணை ஆணையர் பிரபாகரன் வழங்கியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.
முதியவர்களுக்கு முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சங்கர் நகர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு பரிமாறியதும் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டது மன நிறைவை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:திருமணசெலவிற்கான பணத்தில் ஏழை மக்களுக்கு உணவளித்த தம்பதியினர்!