வரும் 2021-22 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் (பிப்.23) தாக்கல் செய்தார். அதில், மாநில அரசின் வருவாய் குறைந்துவருவதாகத் தெரிவித்த அவர், அதற்கு கரோனா தொற்று, பொருளாதார பாதிப்பு உள்ளிட்டவை காரணம் என்றாலும், மத்திய அரசு கலால் வரியை குறைத்துவிட்டு செஸ் எனப்படும் மேல் வரியை அதிகரித்ததே காரணம் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாநில அரசை வஞ்சிக்கும் மத்திய அரசு
வரி வருவாய்: மத்திய Vs மாநில அரசு
இது தொடர்பாக பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜோதி சிவஞானம் பேசுகையில், "பெட்ரோல் மீதான கலால் வரி ஏப்ரல் மாதத்தில் 9.48 ரூபாயாக இருந்தது, அதனை மே மாதத்தில் 2.98 ரூபாயாக குறைத்த மத்திய அரசு, செஸ்- ஐ 12 ரூபாயிலிருந்து 30 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் மீதும் இதேபோல் வரி குறைக்கப்பட்டு, செஸ் உயர்த்தப்பட்டுள்ளது. செஸ் விதிக்கப்படுவது அதிகரித்துள்ளதால் நிதிக் குழு பரிந்துரைப்படி மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய 41 சதவிகிதத்துக்கு 31 சதவிகிதம் தான் கிடைக்கிறது. இதனால் மாநில அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசிடம் கிடைக்க வேண்டிய ஒட்டுமொத்த வரி வருவாயில், மத்திய அரசு ஒப்புக்கொண்ட தொகையைவிட 11,897 கோடி ரூபாய் குறைவாக வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சொந்த வரி வருவாயும் குறைந்துள்ளது, இதனால் மாநில பொருளாதரத்தில் கடன் சுமை கணிசமாக அதிகரித்துள்ளது" என்று கூறினார்.
மாநில உரிமை பேசும் அதிமுக
மத்திய பாஜக அரசின் தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அதிமுக அரசு மாநில அரசுக்கு உரிய நிதியை வழங்குமாறு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜிஎஸ்டிக்கு முன் பின்
ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பின் மாநில அரசு சுயமாக நிதியை திரட்டவும், புதிய வரிகளை விதிக்கவும் அதிகாரமில்லாத சூழல் நிலவுகிறது. மத்திய அரசு இது போன்ற நிதிப் பங்கீடை திட்டமிட்டு குறைப்பதால் மாநில அரசுகள் உள்ளூர் திரையரங்குகள், மதுபானங்களின் மீது அளவுக்கு அதிகமான வரியை விதிக்கின்றன. மேலும், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மது போன்றவற்றை சார்ந்து மாநில பொருளாதார உள்ளது பல புதிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம்.