சென்னை: அரசுப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் தமிழ்நாடு அரசின் முடிவுக்கு எதிராக, ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'பள்ளிக்கல்வி துறை இயக்குநர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும்.
அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். அந்த விண்ணப்பங்கள் பள்ளி நிர்வாக குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். அந்த குழு பள்ளிக்கல்வி துறை இயக்குநரின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள், சான்றிதழ்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த நியமனங்கள் தற்காலிகமானதுதான். கல்வி பெறும் உரிமைச்சட்டத்தின் வழிகாட்டுதல்களின்படி தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி நியமனம் வழங்கப்பட வேண்டும். இந்த நியமனங்கள் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்படும். மேலும், வழக்குத்தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டது.
இதனையடுத்து, தற்காலிக ஆசிரியர்கள் நியமன விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால ஆணையின் அடிப்படையில் திருத்திய வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் இரண்டாம் நிலை மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் 13,331 பேரை தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் அடங்கிய பள்ளி நிா்வாக குழு மூலம் நியமிக்கப் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், 'ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரே இடத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள், இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பயில்பவர்களுக்கும் வாய்ப்பு வழங்குவது, வகுப்பறையில் பாடம் நடத்த அறிவுறுத்தி, அதன் அடிப்படையில் அவர்களின் திறனை அறிவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்’ வெளியிடப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்கும் முறை: கால அட்டவணை காலிப்பணியிடங்கள் விளம்புகை வாரியாக அனைத்து காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களையும் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலக அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் மாவட்டக் கல்வி அலுவலர் / வட்டாரக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டிய நாட்கள் ஜூலை 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
அப்படி பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் கல்விச் சான்றுகளை கூர்ந்தாய்வு செய்து, விண்ணப்பதாரர்களின் விவரங்களை இணைப்பிலுள்ள Google Sheet படிவத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் பள்ளிக்கல்வி ஆணையரகத்திற்கு 06-07-2022 அன்று அனுப்பி வைக்க வேண்டும்.
முன்னுரிமை இடைநிலை ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் 01.06-2022 தேதியில் தொடக்கக் கல்வி / பள்ளிக் கல்வி துறையின் கீழ் வரும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை / பட்டதாரி / முதுகலை ஆசிரியர் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
முதுகலை ஆசிரியர்கள் விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான நேரடியாகவோ அல்லது விண்ணப்பங்கள் மின்னஞ்சல் வாயிலாகலோ உரிய கல்வித்தகுதிச் சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேற்சொன்னவாறு மாவட்ட கல்வி அலுவலர் பெறும் விண்ணப்பங்களை, விண்ணப்பதாரர் தற்காலிக நியமனம் கோரும் பள்ளித் தலைமையாசிரியருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை மின்னஞ்சல் வாயிலாக தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிட ஏதுவாக சம்மந்தப்பட்ட அலுவலர்களின் மின்னஞ்சல் முகவரியினை செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தற்காலிக ஆசிரியர் நியமனம்: தகுதியானவர்களுக்கு மட்டுமே பணி - நீதிமன்றம் உத்தரவு