ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கிவைத்தார். இந்தத் திட்டம் தொடர்பான வழிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கை நியாய விலைக்கடைகளுக்கு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தச் சுற்றறிக்கையில், "பொது விநியோகத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்குள் அதே கிராமம், வார்டு தவிர பிற நியாயவிலைக் கடைகளில் தங்களுக்கான அத்தியாவசிய பொருள்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் போதுமான அளவில் இருப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். எவ்வித புகார்களுக்கு இடம் அளிக்காமல் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள், வயது முதிர்ந்தோர் தங்களுக்கான பொருள்களைப் பெற தங்கள் உறவினர்கள் அல்லது தெரிந்தவர்களை நியமித்து பொருள்களைப் பெற ஏதுவாக உரிய படிவத்தில் நபர்களுக்கான விவரங்களைப் பூர்த்திசெய்திருக்க வேண்டும்.
மேலும், பிறமாநிலத் தொழிலாளர்கள் மத்திய அரசின் விலையான அரிசி ஒரு கிலோ மூன்று ரூபாய்க்கும், ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வாங்கிக்கொள்ளலாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.